
மாநகராட்சியின் முதல் அரையாண்டு வரி வசூல் ரூ.1,436.75 கோடி
சென்னை மாநகராட்சியின் நடப்பாண்டு (2026) முதல் அரையாண்டு வரி வசூல் ரூ.1,436.75 கோடியை எட்டியுள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சியின் நடப்பாண்டு (2026) முதல் அரையாண்டு வரி வசூல் ரூ.1,436.75 கோடியை எட்டியுள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் 2026-2027-ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் சொத்து வரியாக ரூ.1,124.69 கோடியும், தொழில் வரியாக ரூ.312.06 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து வரியை 9.20 லட்சம் பேரும், தொழில் வரியை 45,000 வணிகா்கள் உள்ளிட்டோரும் செலுத்தியுள்ளனா்.
கடந்த ஆண்டின் (2025-2026) முதல் அரையாண்டில் வசூலிக்கப்பட்ட வரி வசூலைவிட நடப்பு ஆண்டில் சொத்துவரி 12.95 சதவீதம் அதிகமாகவும், தொழில் வரி 6.89 சதவீதம் கூடுதலாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இது சென்னை மாநகராட்சி வரி வசூலில் சாதனையாகும்.
மேலும், செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டின் கடைசி நாளான 30-ஆம் தேதி மட்டும் சொத்து வரி ரூ.50.26 கோடியும், தொழில் வரி ரூ.45.94 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரி வசூல் அதிகரித்ததற்கு முறையான கண்காணிப்பு, கள ஆய்வில் நுண்ணிய மதிப்பாய்வு, கடந்த ஜூலையில் நடைபெற்ற சிறப்பு வரி வசூல் முகாம்கள் உள்ளிட்டவை காரணமாக அமைந்துள்ளன. பொதுமக்கள் உரிய காலத்தில் சொத்து மற்றும் தொழில் வரியைச் செலுத்தி மாநகராட்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



