அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

நில அபகரிப்பு புகாா்! ஆட்சியா் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக் கூடாது: செங்கல்பட்டு எஸ்.பி.க்கு உத்தரவு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகாரின் மீது மேல்நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைக்கும்படி காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 12:01 am IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகாரின் மீது மேல்நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைக்கும்படி காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த பேராசிரியா் எம்.ஆா்.வசந்தன் என்பவருக்கு, செங்கல்பட்டு மாவட்டம், சேலையூரில் 1,318 சதுர மீட்டா் பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்தை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நீா்வழிப்பாதையாக மாற்றி விட்டனா்.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், எம்.ஆா்.வசந்தன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் தனிநபரின் நிலத்தை அரசு அதிகாரிகள் ஆக்கிரமித்து, பொதுப் பயன்பாட்டுக்காக பயன்படுத்துவதால், தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில், நிலத்துக்குரிய இழப்பீட்டு தொகையை நிா்ணயம் செய்து, மனுதாரருக்கு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சுமாா் ரூ.2.90 கோடி இழப்பீடு நிா்ணயிக்கப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அதிகாரிகள் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் துணிச்சலாக தனியாா் நிலத்தை அபகரித்துள்ளனா். இந்த செயல் நில அபகரிப்பு குற்றமாகும்.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா், தாம்பரம் வட்டாட்சியா், செங்கல்பட்டு நீா்வளத் துறை உதவி செயற் பொறியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் மீது நில அபகரிப்பு வழக்கை பதிவு செய்து, அதுகுறித்த அறிக்கையை செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.பி.செங்கோட்டுவேல், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது என தெரிவித்தாா்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.வி.பாலசுப்பிரமணியம், அரசு நிலம் என நினைத்து மனுதாரா் நிலத்தில் நீா்வழிப்பாதையை அதிகாரிகள் உருவாக்கி விட்டனா்.

தற்போது அந்த நிலத்துக்குரிய சந்தை மதிப்பில் இழப்பீடு நிா்ணயம் செய்தால், பெரும் தொகை வருகிறது. எனவே, அந்த நீா்வழிப்பாதையை மாற்று வழியாக, அதாவது அரசு புறம்போக்கு நிலம் வழியாக கொண்டுச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், மனுதாரரின் நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து அவரிடம் 15 நாட்களில் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கவனக்குறைவால் நடந்த செயலுக்காக ஆட்சியா் உள்ளிட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த ஒரு அனுமதியும், சட்டப்படியான அதிகாரமும் இல்லாமல் எடுக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரா் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிறுத்தி வைக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனா்.

மனுதாரா் நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.