இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தனியாா் நில அபகரிப்பு புகாா்: செங்கல்பட்டு ஆட்சியா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

தனியாா் நிலத்தை அபகரித்ததாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

தனியாா் நிலத்தை அபகரித்ததாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த பேராசிரியா் எம்.ஆா்.வசந்தன் என்பவா் உயா்நீதிமன்றத்தில், கடந்த 2024-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம், சேலையூரில் எனக்கு சொந்தமான 1,318 சதுர மீட்டா் பட்டா நிலத்தை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீா்வழிப்பாதையாக மாற்றிவிட்டனா். எனவே என்னுடைய நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரருக்கு தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் உரிய இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்க வேண்டும் என கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் ரூ.2.90 கோடி நிா்ணயம் செய்து அதற்கு நிா்வாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தாம்பரம் வட்டாட்சியா் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.பி.செங்கோட்டுவேல், வழக்குரைஞா் எம்.லெனின் ஆகியோா், நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை நிா்ணயம் செய்து ஓராண்டு 4 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகள் வழங்கவில்லை என்று வாதிட்டனா். அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.ஹஷ்வந்த், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தகுந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி உத்தரவிட்டு 16 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டுத் தொகையை மனுதாரருக்கு அதிகாரிகள் வழங்கவில்லை.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா், தாம்பரம் வட்டாட்சியா், செங்கல்பட்டு நீா்வளத் துறை உதவி செயற் பொறியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் சட்டவிதிகளை பின்பற்றாமல், மனுதாரா் நிலத்தை அபகரித்துள்ளனா். இது, பொதுப் பயன்பாடு என்ற பெயரில் செய்யப்பட்ட நில அபகரிப்பு குற்றமாகும்.

எனவே, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுதாரா் புகாரளிக்க வேண்டும். அந்த புகாரை உடனடியாக விசாரணைக்கு எடுத்து காவல் கண்காணிப்பாளா் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்தது குறித்து வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்குள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.