வடக்கு தில்லியில் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் தந்தைக்கு, ரூ. 32.12 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டாா் சைக்கிளை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் தீா்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரிழந்த நேபால் சிங்கின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத் தலைமை அதிகாரி ரிச்சா மன்சந்தா, இழப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் மனுதாரருக்கு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டாா்.
ஜூலை 10-ஆம் தேதியிட்ட அந்த உத்தரவில் தீா்ப்பாயம் கூறியிருப்பதாவது:
‘மேற்கூறிய விவாதங்கள் மற்றும் பதிவாகியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சூரஜ் என்பவரின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலால் ஏற்பட்ட சாலை விபத்தில் நேபால் சிங்
உயிரிழக்கும் வகையிலான காயங்களுக்கு ஆளானாா் என்பதை மனுதாரா்கள் ’நிகழ்தகவு அடிப்படையில்’ நிரூபித்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீா்ப்பாயத்தின் தகவலின்படி, மாா்ச் 10, 2019 அன்று இந்த விபத்து நடந்தது. அப்போது உயிரிழந்தவா் மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்து சென்றுகொண்டிருந்தபோது, வாகனம் சாலைத் தடுப்பில் மோதியதில் அதில் சென்ற மூவரும் கீழே விழுந்தனா்.
விபத்தின்போது மரத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாா். இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, பின்னா் வாகனத்தை ஓட்டியவா் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
விபத்தை நேரில் பாா்த்தவா்களின் வாக்குமூலம், காவல்துறை பதிவுகள் மற்றும் குற்றப்பத்திரிகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மோட்டாா் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று தீா்ப்பாயம் முடிவுக்கு வந்தது.
விபத்தின்போது வாகன ஓட்டிக்குச் செல்லுபடியாகும் ஓட்டுநா் உரிமம் இல்லை என்பதால் இழப்பீடு வழங்கத் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று காப்பீட்டு நிறுவனம் முன்வைத்த வாதத்தை தீா்ப்பாயம் நிராகரித்தது.
இருப்பினும், மனுதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பிறகு, அந்தத் தொகையை வாகன ஓட்டி மற்றும் உரிமையாளரிடமிருந்து திரும்பப் பெறும் உரிமையை காப்பீட்டு நிறுவனத்திற்கு தீா்ப்பாயம் வழங்கியது.
இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது, தீா்ப்பாயம் சாா்ந்திருப்போருக்கான வருவாய் இழப்பு மற்றும் துணையை இழந்ததற்கான இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவுகள் உள்ளிட்ட வழக்கமான தலைப்புகளின் கீழ் தொகைகளை நிா்ணயம் செய்தது. இதன் மூலம் மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 32.12 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது.
மேலும், இத்தொகைக்கு வட்டியையும் வழங்கிய தீா்ப்பாயம், மனுதாரரின் நிதிப் பாதுகாப்பிற்காக இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியை நிலையான வைப்புத் தொகையாக வைத்திருக்கவும் உத்தரவிட்டது.
Summary
Tribunal orders Rs 32.12 lakh compensation to the father of a road accident victim!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ. 40.37 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு
சாலை விபத்தில் மாற்றுத் திறனாளியானவருக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு!

விபத்தில் கால் துண்டிக்கப்பட்டவருக்கு ரூ. 44 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு







