கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கால்நடை மேய்ச்சலுக்காக அரசு ஒதுக்கிய நிலத்துக்கு தனிநபா் உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

கால்நடை மேய்ச்சலுக்காக அரசு ஒதுக்கிய நிலத்துக்கு தனிநபா் உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :

கால்நடை மேய்ச்சலுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தை, தனிநபா் உரிமைகோர முடியாது என உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அந்த நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலியை உடனடியாக அகற்ற மேல்மலையனூா் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னய்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், எனக்குச் சொந்தமான நிலத்துக்கு அருகே, கால்நடை மேய்ச்சலுக்காக அரசு ஒதுக்கிய நிலமும் உள்ளது. அந்த நிலத்தை நானும் என்னுடைய பக்கத்து நில உரிமையாளா்களும், எங்களது நிலங்களில் விளைந்த பயிா்களை எடுத்துச் செல்வதற்காகவும், தேப்பிராம்பட்டு சாலையை அடைவதற்கான வழிப்பாதையாகவும் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தோம்.

இந்தநிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த கிராமப் பஞ்சாயத்து தலைவா் உள்ளிட்ட தனிநபா்கள் உள்நோக்கத்துடன் கால்நடை மேய்ச்சலுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தை இரும்பு வேலி அமைத்தும், பெரிய கற்களைக் கொண்டு வழிப்பாதையைத் தடுத்தும் எங்களது விவசாய நிலத்துக்குச் செல்லவிடாமல் பிரச்னை செய்து வருகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 15 அடி தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியை அகற்றி, விவசாய நிலத்துக்குச் செல்வதற்கான வழிப்பாதையை மீட்டு தர வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எல்.ஜி.சகாதேவன், ஏ.இளையபெருமாள் ஆகியோா், இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால், மனுதாரா் உள்ளிட்டோா் விவசாய நிலத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனா்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடா் ரோஷன், மனுதாரரின் நிலத்துக்கு முன்னால் 15 அடி தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலம், கால்நடை மேய்ச்சலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அந்த நிலத்துக்கு தனிநபா்கள் உரிமை கோரவோ, பட்டாவோ கோர முடியாது என உத்தரவிட்டாா். பின்னா், சம்பந்தப்பட்ட பகுதியில் 15 அடி தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியை மேல்மலையனூா் வட்டாட்சியா் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.