
ஜாதிச் சான்று! அதிகாரியின் தாமதத்துக்கு மாணவியை பொறுப்பாக்க முடியாது: உயா்நீதிமன்றம்
ஜாதிச் சான்று வழங்க அதிகாரி ஏற்படுத்திய தாமதத்துக்காக மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியைப் பொறுப்பாக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
ஜாதிச் சான்று வழங்க அதிகாரி ஏற்படுத்திய தாமதத்துக்காக மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியைப் பொறுப்பாக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அம்பத்தூரைச் சோ்ந்த மாணவி வி.கீா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், நான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்தேன். என்னிடம் இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, கிறிஸ்தவ சிறுபான்மையினா் சான்றுகள் உள்ளிட்டவை இல்லை. எனவே, சான்றிதழ்கள் கிடைத்தவுடன் சமா்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தேன்.
இந்த நிலையில், கடந்த ஆக. 4-ஆம் தேதி கிறிஸ்தவ சிறுபான்மையினா் சான்றும், ஆக. 11-ஆம் தேதி இருப்பிடச் சான்றும் கிடைத்தன. அதேபோன்று, ஆக. 15-ஆம் தேதிதான் எனக்கு ஜாதிச் சான்று கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்த சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தேன். ஆனால், சான்றிதழ்களைப் பதிவேற்றுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறி, சான்றிதழ்களை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு ஆக. 12-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிந்துள்ளது. ஆனால், மாணவிக்கு ஆக. 15-ஆம் தேதிதான் ஜாதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்கும் அதிகாரியால் ஏற்பட்ட தவறுக்கு மனுதாரரான மாணவியைக் குறைகூற முடியாது.
நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சான்றிதழ் சமா்ப்பிக்கவில்லை என்பதை மட்டுமே காரணமாகக் கூறி, மாணவியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று கருத்து தெரிவித்தாா்.
பின்னா், அசல் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, தகுதி, தரவரிசை மற்றும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்குள்பட்டு மாணவி கீா்த்தியை கலந்தாய்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்துவிட்டால், அடுத்தடுத்த சுற்றுகளில் மாணவியின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






