காரை கடத்திக் கொள்ளை: ரூ.50 லட்சம் மீட்பு
காஞ்சிபுரம் அருகே காரை கடத்திச் சென்று பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்தில் ரூ.50 லட்சத்தை போலீஸார் மீட்டனர்.
காஞ்சிபுரம் அருகே காரை கடத்திச் சென்று பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்தில் ரூ.50 லட்சத்தை போலீஸார் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாழையாத்தம்
பஜாரைச் சேர்ந்தவர் அசோக்குமார் ஜெயின் (36). இவர், அதே பகுதியில் நகைக் கடை வைத்துள்ளார். இவர், கூடுதல் நகைகளை வாங்கி கடையை விரிவுபடுத்தத் திட்டமிட்டார்.
இதற்காக தனது கடை ஊழியர்கள் பிச்சாண்டி (31), மெய்வண்ணன் (35) ஆகியோரிடம் தலா ரூ.60 லட்சம் வீதம் தனித் தனியாக 3 பைகளில் ரூ.1.80 கோடி ரொக்கத்தைக் கொடுத்து சென்னைக்கு கடந்த புதன்கிழமை காரில் அனுப்பி வைத்தார்.
காரை பாஸ்கர் (35) ஓட்டினார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் அருகே பொன்னியம்மன் பட்டறை என்ற இடத்தில் வந்தபோது, முகமூடிக் கொள்ளையர்கள் காரை வழிமறித்து நிறுத்தி கடத்திச் சென்றனர்.
தகவலறிந்த அசோக்குமார் ஜெயின், ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் காரின் இயக்கத்தை நிறுத்தினார். இதனால், கார் பாலுசெட்டிச்சத்திரத்தில் நின்றது. இதையறிந்த அந்தக் கும்பல் ஒரு பணப்பையில் இருந்த ரூ.60 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாலுசெட்டிச்சத்திரம் காவல் ஆய்வாளர் சேகர் வழக்குப் பதிவு செய்தார்.
குற்றவாளிகளைப் பிடிக்க ஆய்வாளர்கள் சேகர், சாரதி, பிரபாகர், லட்சுமிபதி, உதவி ஆய்வாளர் டீக்காராம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், முகமூடிக் கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சென்னைக்கு விரைந்தனர்.
அப்போது, புரசைவாக்கம் அபிராமி மஹால் அருகே கொள்ளையடித்த பணத்தை பங்கு போடுவது தொடர்பாக 6 பேர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் 6 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை மங்களாபுரம், இடர்கன் 2-ஆவது தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் முனுசாமி (எ) சசிக்குமார், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சேகர் மகன் சுனில்குமார் (25), ஷெனாய் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பச்சையப்பன் (32), புளியந்தோப்பைச் சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் பழனி (36), திருவொற்றியூர் சிவராஜ் மகன் பாண்டியன் (எ) ஜெயக்குமார் (22), குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (எ) ரமேஷ் (43) என்பது தெரியவந்தது.
பின்னர், அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரு கார்கள், நகைக் கடை ஊழியர்களின் இரு செல்லிடப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.50 லட்சம், கடத்தப்பட்ட காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.1.70 கோடியை நீதிமன்றத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்க உள்ளனர்.
ஹவாலா பணமா?
காரை கடத்தி கொள்ளையடிக்கப்பட்டது ஹவாலா பணம் என்று கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நகைக் கடை அதிபர் அசோக்குமார் ஜெயினிடம் குடியாத்தத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (எ) ரமேஷ் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார். அப்போது அவர், அசோக்குமார் ஜெயினிடம் கடன் வாங்கி இருந்தார். இந்தக் கடனுக்காக, ரமேஷுக்கு சம்பளமே தராமல் அசோக்குமார் ஜெயின் கழித்துக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், சட்டத்துக்குப் புறம்பான ஹவாலா பணம் அசோக்குமாரிடம் அதிக அளவில் உள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும், ஏற்கெனவே அவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அப்போது அவர் போலீஸில் புகார் செய்யவில்லை எனவும் கூறிய ரமேஷ், தற்போது கொள்ளையடித்தாலும் அவர் போலீஸில் புகார் கொடுக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
இதனால், திட்டமிட்டு பணத்தைக் கொள்ளையடித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எஸ்பி முத்தரசி விளக்கம்
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் முத்தரசியிடம் கேட்டபோது, மீட்கப்பட்டது ஹவாலா பணம் என்று காவல் துறை தரப்பில் செய்திக்குறிப்பு ஏதும் வெளியிடவில்லை. விசாரணையிலும் அதுபோன்று ஏதும் தெரியவில்லை. அதற்கான ஆதரமும் இல்லை.
அவ்வாறு கொள்ளையர் ரமேஷ் கூறியிருந்தாலும், அவருக்கு ஹவாலா பணம் குறித்து போதிய அறிவு இருக்குமா என்பது தெரியவில்லை. மேலும், அவர் கூறுவதை வைத்து நாம் விசாரிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
ஏனெனில் ஹவாலா பணம் குறித்து விசாரிக்க தனி அதிகாரிகள் உள்ளனர். இது தொடர்பாக நாங்கள் யாருக்கும் புகார் தெரிவிக்கவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

