மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் உயிரிழப்பு: பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட பல்வேறு அமைப்பினர்

வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சியில் பல்வேறு அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது,

News image

பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 9:25 pm

வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சியில் பல்வேறு அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். 
எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்ட விவகாரத்தை முன்வைத்து, வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அண்மையில் போராட்டங்களை நடத்தினர். அவற்றில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். 
இந்த சம்பவங்களுக்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, பெரிய காஞ்சிபுரம் பெரியார் சிலை முன்பிருந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச்செயலர் பாரதி அண்ணா தலைமையில் திரளானோர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அப்போது, நெல்லுக்காரத் தெருவுக்கு வந்தபோது போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 'வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உறுதியான சட்ட நடவடிக்கை எடுத்து, அரசியல் சாசனத்தில் சேர்க்க வேண்டும்' என்று வலியுறுத்தினர். 
ஜாதி, மதக் கலவரங்களை மத்திய அரசு தூண்டுவதாகக் கூறி அதைக் கண்டித்தும், வடமாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பி தடுப்புகளை முற்றுகையிட்டனர். 
அப்போது, டிஎஸ்பி முகிலன் தலைமையில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட திரளான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். பின்பு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.