மிக்ஜம் புயல் எதிரொலி: காஞ்சிபுரத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வருகை!

மிக்ஜம் புயலால் பலத்த சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  காஞ்சிபுரத்திற்கு வருகை.
மிக்ஜம் புயல் எதிரொலி: காஞ்சிபுரத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வருகை!

மிக்ஜம் புயலால் பலத்த சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சனிக்கிழமை காஞ்சிபுரத்திற்கு இரு குழுக்களாக வந்து வெவ்வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜம் புயல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்,மசூலிப்பட்டிணத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பல இடங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனத்த மழைப் பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

புயல் மற்றும் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தேவையான உதவிகளை செய்ய வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை உள்ளிட்ட 11 துறைகள் அடங்கிய 21 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மின் மோட்டார் மூலம் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 3 இடங்களும்,அதிக பாதிப்பு உடைய இடங்களாக 21 இடங்கள் உட்பட மொத்தம் 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பலத்தமழையின் போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடாமல் மக்களை உடனுக்குடன் பாதுகாக்கும் வகையில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளனர். தலா 26 பேர் கொண்ட இரு குழுக்களில் ஒரு குழு காஞ்சிபுரம் நகரிலும் மற்றொரு குழு குன்றத்தூரில் மாங்காட்டிலும் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை, தீயணைப்புத் துறை,சுகாதாரத் துறை,வருவாய்த் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்கவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 044 27237107 மற்றும் 044 27237207 என்ற எண்களிலும் கைபேசி எண் 93454 40662 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இங்கு தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com