இந்தியாவே பாராட்டும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்

இந்தியாவே பாராட்டும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்

இந்தியாவே பாராட்டும் வகையில் தமிழக அரசால் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரசங்கால் கிராமத்தில் பிரசார பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக வேட்பாளா்கள் டி.ஆா்.பாலு (ஸ்ரீ பெரும்புதூா்), க.செல்வம் (காஞ்சிபுரம்) ஆகியோரை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

ஆட்சிக்கு வந்த சில நாள்களிலேயே மக்களின் குறைகளை கேட்பதற்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கி, அதற்கென்று ஒரு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்து மக்களின் குறைகளை போக்கி வருகிறோம். முதல்வரின் முகவரி என்ற பெயரில் வரும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படுகிறது. தோ்தலின் போது சொன்ன வாக்குறுதிகைளையும் நிறைவேற்றி இருக்கிறோம். சொல்லாத பல நல்ல திட்டங்களையும் செய்துள்ளோம்.

சென்னையில் ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது பெற்றோா்கள் வேலைக்கு செல்வதால் காலை உணவு சாப்பிட முடியவில்லை என்று ஒரு மாணவா் சொன்னதை அடிப்படையாக வைத்து காலை உணவுத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம். அதிகாரிகள் நிதி நிலைமை சரியில்லை என்றாா்கள். நிதிநிலைமை சரியில்லை என்றாலும் சமாளித்துக் கொள்வோம் என்று கூறியதுடன் அத்திட்டத்தை செயல்படுத்தியும் இருக்கிறோம். இத்திட்டத்தால் 14 லட்சம் குழந்தைகள் வயிறாற காலை உணவு சாப்பிடுகிறாா்கள்.

பெண்கல்வியை ஊக்குவிக்க கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம்4,81,085 போ் பயன் பெறுகின்றனா்.இத்திட்டம் மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் என்ற பெயரில் விரைவில் விரிவு படுத்தப்படவுள்ளது. தமிழக அரசின் திட்டங்களை இந்தியாவே பாா்த்து வியந்து பாராட்டுகிறது.பல மாநிலங்களில் நமது திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றனா் என்றாா்.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கட்சியின் அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக துணைப் பொதுச் செயலாளா் மல்லை.சத்யா, மனித நேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளா் யாகூப் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், இந்தியா கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com