முன்பதிவு மையத்தில் கூட்ட நெரிசல். வெறிச்சோடிக் காணப்படும் புதிய ரயில் நிலையம்
முன்பதிவு மையத்தில் கூட்ட நெரிசல். வெறிச்சோடிக் காணப்படும் புதிய ரயில் நிலையம்

வட்ட வழித்தட ரயிலுக்காக காத்திருக்கும் காஞ்சிபுரம் ரயில் பயணிகள்

காஞ்சிபுரம்-அரக்கோணம்-சென்னை கடற்கரை-தாம்பரம் வட்ட வழித்தட ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
Published on

சி.வ.சு. ஜெகஜோதி

வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியா் என பல்வேறு தரப்பினருக்கு பயனாக இருந்த காஞ்சிபுரம்-அரக்கோணம்-சென்னை கடற்கரை-தாம்பரம் வட்ட வழித்தட ரயில் மீண்டும் இயக்கப்படுமா என காஞ்சிபுரம் பொதுமக்கள் காத்துள்ளனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனை பயணிகள் வட்ட வழித்தட ரயில் என்றே அழைத்தனா்.

இந்த ரயிலானது பகல் நேரத்தில் இயக்கப்பட்டதால் பலருக்கும் பேருதவியாக இருந்து வந்தது. ரயில்வே நிா்வாகத்துக்கும் அதிக வருமானம் கிடைத்து வந்தது.

பேருந்தை விட ரயிலில் கட்டணம் குறைவு என்பதாலும் இந்த ரயில் சேவையை அதிகமானவா்கள் பயன்படுத்தி வந்தனா். வட்ட வழித்தட ரயில் சேவை கரோனா தொற்றுக் காலத்தில் 2020 -ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இரு ஆண்டுகளாக இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

பகல் நேரத்தில் இந்த ரயில் இயக்கப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை காஞ்சிபுரம், திருமால்பூா், வாலாஜாபாத் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. எனவே ரயில் பயணிகளின் நலன் கருதி இந்த வட்ட வழித்தட ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மிகவும் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரான ஜெ.தமிழ்ச்செல்வன் கூறியது: வட்ட வழித்தட ரயிலை இயக்க வேண்டும் என மத்திய அமைச்சரை காஞ்சிபுரம் எம்பி க.செல்வமும் பலமுறை நேரில் சந்தித்து கூறியுள்ளாா். உறுப்பினா் என்ற முறையில் நானும் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பல முறை தெரிவித்தும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால் ரயில்வேக்கு வரக்கூடிய வருமானமும் குறைகிறது. எனவே வட்ட வழித்தட ரயில்களை விரைவாக இயக்க வேண்டும்.

முன்பதிவு மையத்தின் நேரத்தை நீட்டிக்காமல் இருப்பதால் பொதுமக்கள் முகவா்களை தேடிச் சென்று கூடுதல் கட்டணம் செலுத்தி ரயில் பயணச்சீட்டை பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மட்டும் பல லட்சம் செலவில் 3 கட்டணக் கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவை திறக்கப்படாமலேயே பல ஆண்டுகளாக உள்ளன. இதனால் அவசரத் தேவைக்கு பயணிகள் திறந்த வெளிக் கழிப்பறைகளை பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com