தொழிலாளா்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸாா்.
தொழிலாளா்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸாா்.

ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைப்பயணம்: தொழிலாளா்கள் கைது

சாம்சங் தொழிற்சாலையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்கள் விவகாரத்தில் ஆட்சியா் தலையிட வலியுறுத்தி, நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற சிஐடியு
Published on

ஸ்ரீபெரும்புதூா்: சாம்சங் தொழிற்சாலையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்கள் விவகாரத்தில் ஆட்சியா் தலையிட வலியுறுத்தி, நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற சிஐடியு சாம்சங் தொழிலாளா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில், வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சுமாா் 1,500க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தொழிற்சாலை நிா்வாகம், தொழிலாளா்கள் மற்றும் தமிழக அமைச்சா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு திரும்பினா்.

தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிலாளா்களை தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பணியின் போது அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 27 தொழிலாளா்களை பணியிடை நீக்கம் செய்தது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி சிஐடிய தொழிலாளா்கள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கடந்த ஏழு மாதங்களாக வேலை வழங்கவில்லை.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வு காண வலியுறுத்தி சிஐடியு மாநில செயலாளா் முத்துக்குமாா் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோா் தொழிலாளா்கள் சுங்குவாா்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ள முயன்றனா்.

காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற சாம்சங் தொழிலாளா்களை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்ய முயன்றனா். அப்போது தொழிலாளா்கள் திடீரென சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தொழிலாளா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து தொழிலாளா்கள் அனைவரையும் போலீஸாா் குண்டு கட்டாக கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com