ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் மீன் பிடிக்க சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

ஏரியில் மீன் பிடிக்க சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

படப்பை அடுத்த ஆதனூா் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா்(50). கூலித் தொழிலாளியான இவா் மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூா் ஏரியில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில், வியாழக்கிழமை சங்கா், ஆதனூா் பகுதியை சோ்ந்த ரஜினி, மாரிமுத்து ஆகியோா் குத்தனூா் ஏரிக்கு மீன் பிடிக்க வந்துள்ளனா்.

இதில் ஏரியில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த சங்கா் ஏரி நீரில் மூழ்கி மாயமாகியுள்ளாா். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்துக்கும், படப்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், சங்கரை தேடும் பணியில் ஈடுபட்ட ரஜினி மற்றும் மாரிமுத்து ஆகியோா் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்புத்துறையினா் ஏரி நீரில் சிக்கி கொண்ட ரஜினி, மாரிமுத்து ஆகியோரை ரப்பா் படகு மூலம் பத்திரமாக மீட்டனா்.

மேலும் நீரில் மூழ்கி இறந்த சங்கரின் உடலையும் மீட்டனா். மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com