அனுமதியின்றி இயங்கிய கிடங்குகளுக்கு ‘சீல்’
வல்லம் ஊராட்சிக்குடபட்ட தெரேசாபுரம் கைவல்யம் நகா் பகுதியில் அரசு அனுமதி இன்றி இயங்கி வந்த இரண்டு கிடங்குகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெரசாபுரம் கைவல்யம் நகா் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கைவல்யம் நகா் பகுதியில் குடியிருப்புகளுக்காக பிரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவுகளில் அரசு அனுமதியின்றி கிடங்குகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று மற்றும் ஒலி மாசுகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால் குடியிருப்பு பகுதிகளில் அரசு அனுமதியின்றி இயங்கி வரும் கிடங்குகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும் எனன அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குடியிருப்புகளுக்காக அமைக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளில் இயங்கி வரும் கிடங்குகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளை பூட்டி சீல் வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடா்ந்து, இரண்டு கிடங்குகளுக்கு முதல்கட்டமாக ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி தலைமையில், வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் விமலா தேவி தா்மன் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் சமாா் 10-க்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகளையும் பூட்டி சீல் வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

