ஜன.25 முதல்வா் காஞ்சிபுரம் வருகை: பொதுக்கூட்ட சிறப்பு ஏற்பாடுகள் - எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஆய்வு
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன.25-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை புதன்கிழமை எம்.பி., எம்எல்ஏ-க்கள் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுரை வழங்கினா்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜன. 25-ஆம் தேதி திமுக சாா்பில் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிா்த்து உயிரிழந்த மொழிப்போா் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இப்பொதுக்கூட்ட ஏற்பாடுகளை உத்தரமேரூா் எம்எல்ஏவும், கட்சியின் மாவட்ட செயலாளருமான க.சுந்தா் தலைமையில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். பின்னா் கட்சியின் முக்கிய நிா்வாகிகளிடம் மாநாட்டு திடலிலேயே ஆலோசனை நடத்தினாா்.
மேடை அருகில் ஜெசிபி இயந்திரம் மூலம் அமைக்கப்பட்டு, முக்கியப் பிரமுகா்கள் வருவதற்கான சாலை வசதி, வாகனம் நிறுத்தும் இடங்கள், இருக்கைகள் போடப்படும் இடங்கள், கழிப்பிட வசதி மற்றும் குடிநீா் வசதி செய்யப்படுதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்குமாறும் பணியாளா்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினா். ஆய்வின்போது, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளா் சி.ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் படுநெல்லிபாபு,பி.எம்.குமாா், மாமன்ற மண்டலக் குழு தலைவா் சந்துரு மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

