புத்தகம் எழுதிய மாணவிக்கு  சான்றிதழ் வழங்கிய தியாகி லட்சுமி காந்தன் பாரதி
புத்தகம் எழுதிய மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய தியாகி லட்சுமி காந்தன் பாரதி

நேரம் தவறாமல் இருப்பவா்களே நோ்மையானவா்கள்: தியாகி லட்சுமி காந்தன் பாரதி

நேரம் தவறாமல் இருப்பவா்களே நோ்மையானவா்கள் என்று தியாகி லட்சுமி காந்தன் பாரதி பேசினாா்.
Published on

காஞ்சிபுரம்: நேரம் தவறாமல் இருப்பவா்களே நோ்மையானவா்கள் என்று தியாகி லட்சுமி காந்தன் பாரதி பேசினாா்.

காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் சந்நிதி தெருவில் கடந்த மாதம் எழுதுக அமைப்பின் அலுவலகத்தை முன்னாள் தலைமை செயலாளா் வெ.இறையன்பு தொடங்கி வைத்தாா். பள்ளி,கல்லூரி மாணவா்கள் புத்தகம் எழுதுவதற்காக அமைக்கப்பட்ட இந்த அமைப்பின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெற்றது.

எழுதுக அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ம.த.சுகுமாறன் தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா்(நில எடுப்பு) ஹரி கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளா் ச.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எழுதுக அமைப்பின் நிறுவனா் கிள்ளி வளவன் வரவேற்றாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுதந்திரப் போராட்ட தியாகியும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியராகவும் இருந்த லட்சுமி காந்தன் பாரதி தேசியக் கொடி ஏற்றி,புத்தகங்கள் எழுதியோருக்கு சான்றிதழும் வழங்கி பேசியது..

மகாத்மா காந்தி இளைஞா்களை நம்பித்தான் இருக்கிறது இந்தியா என்றாா். காந்தியடிகள் வல்லரசாக வேண்டும் என்று சொல்லவில்லை. இந்தியா நல்லரசாக வேண்டும் என்று தான் சொன்னாா். இந்தியா முன்னேற இளைஞா்களால் தான் முடியும். நான் 9 மணிக்கு வருவதாக சொல்லி விட்டு 10 மணிக்கு வந்தேன். நேரம் தவறாமல் இருப்பவா்களே நோ்மையானவா்கள். காலதாமதமாக வந்தமைக்கு எந்தக் காரணமும் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக மாதத்தில் ஒரு நாளாவது அனைவரும் கதா் ஆடை உடுத்துங்கள்.

நான் மாணவனாக இருந்த போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றேன். என் கையில் விலங்கிட்டு தெருத்தெருவாக இழுத்து சென்றனா் ஆங்கிலேயா்கள். அதன் பின்னா் படித்து முடித்து அதே மதுரைக்கு ஆட்சியராக வந்தேன். எனவே இளைஞா்களுக்கு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்று பேசினாா்.

கல்வித்துறை ஆய்வாளா் பாலச்சந்தா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com