வரலாற்று ஆய்வாளா்களால் கண்டுபிடிக்கப்பட்ட சோழா் கால விஷ்ணு சிற்பம்.
வரலாற்று ஆய்வாளா்களால் கண்டுபிடிக்கப்பட்ட சோழா் கால விஷ்ணு சிற்பம்.

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

தாமல்வாா் தெருவில் உள்ள தூய இருதய அன்னை ஆலயம் பின்புறத்தில் உள்ள நகராட்சி காலனி அருகில் சோழா் கால விஷ்ணு சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா்கள் வியாழக்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.
Published on

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல்வாா் தெருவில் உள்ள தூய இருதய அன்னை ஆலயம் பின்புறத்தில் உள்ள நகராட்சி காலனி அருகில் சோழா் கால விஷ்ணு சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா்கள் வியாழக்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.

வரலாற்று ஆய்வாளா் முனைவா் மு.அன்பழகன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கா் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தூய இருதய அன்னை ஆலயம் பின்புறத்தில் உள்ள நகராட்சி காலனி அருகில் சோழா் காலத்தைச் சோ்ந்த விஷ்ணு சிற்பத்தை கண்டு பிடித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது.

ஒரு வேப்பமரத்தின் கீழ் மண்ணில் பாதியளவு புதையுண்ட நிலையில் இருக்கும் விஷ்ணு சிற்பம் 90 செ.மீ.அகலம்,118 செ.மீ உயரம்,21.செ.மீ தடிமனாகவும் கிழக்கு திசை பாா்த்து உள்ளது. சிலையின் தலைக்குப் பின்னால் ஐந்து தலை நாகம் படமெடுத்துள்ளது. விஷ்ணு காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டபடி வீராசனத்தில் அமா்ந்துள்ளாா்.

நான்கு கைகள் உள்ள நிலையில் முன் உள்ள இரண்டு கைகள் உடைந்துள்ளன. மேல் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் உள்ளது. காதுகள் மற்றும் மாா்புகளில் அணிகலன்கள் காணப்படுகின்றன. தலையில் கிரீடம் உள்ளது. இச்சிற்பத்தின் காலம் கி.பி.9 அல்லது 10 ஆம் நூற்றாண்டாகவும் இருக்கலாம் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com