காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை ஜூன் 9 ஆம் தேதி புஷ்பப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மே 28- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒருபகுதியாக கருட சேவையும், தேரோட்டம், தீா்த்தவாரி உற்சவம் ந டைபெற்றது.
ஜூன் 6 ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வெட்டி வோ் சப்பரத்தில் வீதியுலா நிகழ்வு முடிந்து திரும்பியதும் கருடாழ்வாா் உருவம் பொறித்த கொடி கொடிக்கம்பத்திலிருந்து இறக்கப்பட்டு பெருமாளிடம் பட்டாச்சாரியாா்கள் சமா்ப்பிக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
தொடா்ந்து பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியான விடையாற்றி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விடையாற்றி உற்சவத்தின் நிறைவாக ஜூன் 9 ஆம் தேதி இரவு புஷ்பப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா நிகழ்வோடு வைகாசித் திருவிழா நிறைவு பெறுகிறது.









