காஞ்சிபுரம் குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) அதிகாலை கோலாகலமாக நடைபெற்றதைப் பற்றி...

காஞ்சிபுரம் குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குமரகோட்டத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான இங்கு கந்தபுராணம் அரங்கேற்றம், முருகப்பெருமான் சிறுவனாக வந்து பாம்பன் சுவாமிகளுக்கு வழிகாட்டி அருளியது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளும் உடையது.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி மூலவரின் அருகே உள்ள அர்த்தமண்டபம் வெள்ளிக் கவசத்தாலும், தண்டாயுதபாணி சன்னதி தங்க முலாம் பூசப்பட்ட கவசத்தாலும் புதுப்பிக்கப்பட்டது. மேலும், கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.
இஷ்ட சித்தி பிரபாகர் குருக்கள் மற்றும் கோயிலின் தலைமை அர்ச்சகர் கே.ஆர். காமேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் 100 சிவாச்சாரியார்கள், 40 திருமுறை ஓதுவார்கள் ஆகியோர்களுடன் யாகசாலை பூஜைகள் கடந்த நவ. 25ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியன. நவ. 27ஆம் தேதி மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், சனிக்கிழமை (நவ. 28) விசேஷ திரவிய ஹோமங்களும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) அதிகாலையில் மகாபூர்ணாஹூதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனித நீர் குடங்கள் மங்கல மேல வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித நன்னீராட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் நேர்முக வர்ணனை செய்தார்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகளான சி. ராதாகிருஷ்ணன், தா. பச்சையப்பன் பிரபு, ச. வெங்கடேசன், ஜி.ஆர். நவீன் குமார், கே.பி.எஸ். பிரவீன் குமார், ஜி. முருகேஷ் மற்றும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் சி. குமரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் கேசவன் ஆகியோர் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, உத்திரமேரூர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். நாகராஜ், நீதிபதிகள் நவீன்துரை பாபு, இசக்கி மகேஷ், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் புவனேஷ் ராம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் குமரகுருநாதன், தொழிலதிபர்கள் பச்சையப்பாஸ் சுந்தர், சந்தானகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Summary
The Maha Kumbhabhishekam at the Kumarakottam Subramanya Swami Temple in Kanchipuram took place with great grandeur early Sunday morning, drawing a large number of devotees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

