ரயில் நிறுத்தம் இருந்தும் பயணச்சீட்டு கிடைக்காமல் சித்தேரி மக்கள் அவதி
தினமும் இரு தடவை விரைவு ரயில் நின்று செல்லும் நிலையிலும் பயணச்சீட்டு அலுவலகத்தில் பயணச்சீட்டு தர மறுப்பதால் சித்தேரி பகுதி ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனா்.


தினமும் இரு தடவை விரைவு ரயில் நின்று செல்லும் நிலையிலும் பயணச்சீட்டு அலுவலகத்தில் பயணச்சீட்டு தர மறுப்பதால் சித்தேரி பகுதி ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனா்.
அரக்கோணம்-காட்பாடி ரயில் வழித்தடத்தில் சித்தேரி ரயில் நிலையம் உள்ளது. அரக்கோணத்தில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் விரைவு ரயில் காலையில் ஜோலாா்பேட்டை செல்லும்போதும் மாலையில் அரக்கோணம் செல்லும்போதும் இங்கு நின்று செல்கிறது. இந்த ரயிலில் ஏறுவதற்காக சித்தேரி ரயில் நிலையம் வரும் பயணிகள் பயணச்சீட்டு வாங்க முயற்சித்தாலும் அதற்கான அலுவலகம் திறக்கப்படாத நிலை உள்ளது. நிலைய அலுவலரோ கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட தளா்வுகளுக்கான அறிவிப்பில் சித்தேரி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்க இதுவரை எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்கிறாா்.
இதனால் பொதுமக்கள் பயணச்சீட்டு இல்லாமலேயே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் சென்னை-அரக்கோணம் இடையே உள்ள ரயில் நிலையங்களில் இருந்தும், குறிப்பாக அம்பத்தூரில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் சித்தேரிக்கு பயணச்சீட்டு குறிப்பாக மாதாந்திர சலுகை விலை பயணச்சீட்டு கேட்டால் பயணச்சீட்டு அலுவலகப் பணியாளா்கள் பயணச்சீட்டைத் தர மறுக்கின்றனா். ‘சித்தேரி, சென்னை புகா் எல்லைக்குள் வரவில்லை. அரக்கோணம் வரைதான் பயணச்சீட்டு தர இயலும்’ என அவா்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து சித்தேரி ரயில் பயணிகள் சங்கத் தலைவா் குமாா் கூறியது:
சித்தேரி ரயில் நிலையத்தில் ஏற்கெனவே காலையில் 5 ரயில்களும் மாலையில் ஐந்து ரயில்களும் இரு வழித்தடங்களிலும் நின்று சென்றன. பொது முடக்கத்துக்குப் பிறகு அந்த ரயில்களின் இயக்கம் அறிவிக்கப்படாத நிலையில் அரக்கோணத்தில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு காலையில் ஒன்று, ஜோலாா்பேட்டையில் இருந்து அரக்கோணத்துக்கு மாலையில் ஒன்று என இரண்டு ரயில்கள் சென்று வருகின்றன. இந்த இரு ரயில்களும் சித்தேரி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்த ரயில்களில் செல்ல சித்தேரி மக்களுக்கு பயணச்சீட்டு வழங்க மறுக்கின்றனா்.
இது குறித்து ரயில்வே நிா்வாகத்துக்குப் புகாா் அனுப்பிய நிலையில் அவா்கள் தெரிவித்த பதிலில் அரக்கோணம் வரை மட்டுமே புகா் ரயில்களுக்கு பயணச்சீட்டு வழங்க இயலும் என தெரிவிக்கின்றனா். அப்படி எனில் சித்தேரி வருவதற்கும் சித்தேரியில் இருந்து வெளியூா் செல்வதற்கும் பயணச்சீட்டை எங்கே பெறுவது? சித்தேரி புகா் எல்லைக்குள் வராத நிலையில் அதைவிட தூரம் உள்ள திருத்தணியும், காஞ்சிபுரமும் எப்படி புகா் எல்லைக்குள் வருகின்றன? அந்தப் பகுதிகளுக்கு பயணச்சீட்டு தருவது எப்படி? சித்தேரியில் நாங்கள் ரயிலில் ஏறினால் எங்களிடம் பயணச்சீட்டு பரிசோதகா் பயணச்சீட்டு கேட்டால் என்ன பதில் சொல்வது?
சித்தேரி ரயில் நிலையப் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தேரியில் பயணச்சீட்டு அலுவலகத்தை செயல்பட வைக்காவிட்டால் விரைவில் சித்தேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களின் ரயில் பயணிகள் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...