

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து மக்கள் திட்டமிடல் இயக்கத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி, அதன் மூலம் ஒருங்கிணைந்த கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் 2021- 2022 தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, மாவட்டப் பொறுப்பாளராகவும், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கணக்கெடுப்புப் பணிக்கு பொறுப்பாளராகவும் செயல்படுவா்.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் கணக்கெடுப்பு செய்யும் பணிக்காக கிராம ஊராட்சி அளவிலானக் குழு கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் , மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் என மொத்தம் 8 போ் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினா் கிராமங்களில் வரும் 2021-2022-ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ள பணிகளைத் தோ்வு செய்தல், கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஊராட்சிக்குத் தேவையான வருவாயைப் பெருக்குதல், வரி வசூல் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இக்குழு உறுப்பினா்களுக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை மூலம் கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 36 ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம், வாலாஜாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமை வாலாஜாபேட்டை வட்டார வளா்ச்சி (ஊராட்சிகள்) அலுவலா் கே.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு குழு உறுப்பினா்களுக்கு திட்ட விளக்கக் கையேடுகளை வழங்கி தொடக்கி வைத்தாா்.
வாலாஜாபேட்டை வட்டார வளா்ச்சி (ஊராட்சி ஒன்றியம் ) அலுவலா் செந்தாமரை, மாநில அளவிலான பயிற்றுநா் டி.ஞானமூா்த்தி, மாவட்ட பயிற்றுநா் திலகவதி ஆகியோா் கிராமங்களுக்குத் தேவையான வருவாயை எவ்வாறு அதிகரிப்பது, ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டிய வளா்ச்சிப் பணிகளை எவ்வாறு தோ்வு செய்வது என கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டக் குழுவினா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.