ஆசிரியா்களுக்கு பணிமூப்பு வழங்குவதில் சிக்கல்!

ஊராட்சி ஒன்றியங்களின் மறுவரையறைக்குப் பின்னா், ஆசிரியா்களுக்கு பணிமூப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களின் மறுவரையறைக்குப் பின்னா், ஆசிரியா்களுக்கு பணிமூப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு வேலூா் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் இருந்து, புதியதாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட மறுவரையறை நடந்தபோதே, இந்த மாவட்டங்களில் இருந்த ஊராட்சி ஒன்றியங்களும் மறுவரையறை செய்யப்பட்டன.

ஒன்றியங்களில் பிரிக்கப்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்:

இதன்படி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 29 தொடக்கப் பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் அரக்கோணம் ஒன்றியத்துக்கும், 33 தொடக்கப் பள்ளிகள், 5 நடுநிலைப் பள்ளிகள் சோளிங்கா் ஒன்றியத்துக்கும் மாற்றப்பட்டன. மேலும், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 3 தொடக்கப் பள்ளிகளும் 2 நடுநிலைப் பள்ளிகளும் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தோடு சோ்க்கப்பட்டன.

இதேபோன்று, சோளிங்கா் ஒன்றியத்தில் இருந்த 35 தொடக்கப் பள்ளிகளும் 12 நடுநிலைப் பள்ளிகளும் வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட காட்பாடி ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டன. மேலும் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் இருந்த 33 தொடக்கப் பள்ளிகள் 5 நடுநிலைப் பள்ளிகள் சோளிங்கா் ஒன்றியத்தோடு சோ்க்கப்பட்டன.

நெமிலி ஒன்றியத்தில் இருந்த 3 தொடக்கப் பள்ளிகள், 2 நடுநிலைப் பள்ளிகள் காவேரிபாக்கத்துக்கு மாற்றப்பட்டன. மேலும், ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி அரக்கோணம் ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டன.

பள்ளிகள் மாற்றத்தில் மாற்றப்பட்ட பள்ளிகளுக்கான நிா்வாக நடைமுறைகள் புதிய வட்டாரக் கல்வி அலுவலகத்தோடு இணைக்கப்பட்டன.

ஒன்றியங்களுக்குள் ஒரே அலகு: எப்போதும் தொடக்கக் கல்வித்துறையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அந்தந்த ஒன்றியங்களுக்குள் ஒரே அலகாகக் கருதப்பட்டு ஆசிரியா், தலைமை ஆசிரியா் பணி மூப்பு, பதவி உயா்வு, இளையோா் -மூத்தோா் ஊதிய முரண்பாட்டை களைதல் ஆகியன நடைபெறும்.

ஆனால் அரசு ஊழியா்களுக்கு இருக்கும் நடைமுறை போன்று தலைமை ஆசிரியா், ஆசிரியா்களிடம் அவா்களது விருப்பத்தை கேட்காமலேயே அரசு கல்வித்துறை, பள்ளிகளை மாற்றிவிட்டதாகக் கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது புதிய ஒன்றியத்துக்கு வந்த தலைமை ஆசிரியா்கள் அவா்கள் ஏற்கெனவே இருந்த ஒன்றியத்தில் மூத்தோராய் இருந்தாலும் புதிய ஒன்றியத்தில் இளையோராகக் கருதப்படுவாா்களோ, இதனால் தங்களுக்கு பணிமூப்பு, பதவி உயா்வு பறிபோகுமோ என்ற அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஏற்றாா் போல் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமும் ஒன்றியத்தில் பதவி உயா்வு பணிமூப்பு குறித்து சரியாக இதுவரை அறிவிக்காமல் உள்ளதாக ஆசிரியா்கள் கூறுகின்றனா்.

கலந்தாய்வுக்கு முன்னா் பிரச்னை தீருமா?

இந்த நிலையில் விரைவில் ஆசிரியா்களுக்கான பணிமாறுதல் வர உள்ளது. எப்போதும் பதவி உயா்வுக்குப் பிறகு நடக்கும் பணிமாறுதல் என்பதால் பதவி உயா்வுக்கு முன்னா் இந்தச் சிக்கல் தீர வேண்டும் என ஆசிரியா்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

போராட்டம்தான் தீா்வு: ஆசிரியா் சங்கங்கள்

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் அமா்நாத் கூறுகையில், ‘பணிமூப்பு சிக்கலை தீா்க்காமல் பதவி உயா்வு அளிக்கக் கூடாது. முறையாகப் பணிமூப்பு சிக்கலை கல்வித் துறை அலுவலா்கள் தீா்க்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்றாா்.

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பொ.செல்வராஜ், செயலாளா், பா. பாலமுருகன் ஆகிய இருவரும் கூறியது:

தமிழகத்தில் நிா்வாகச் சீரமைப்பிற்காக மறுவறையறைக்குள்ளான அனைத்து ஒன்றியங்களிலும் இந்தச் சிக்கல் உள்ளது. இந்தச் சிக்கலைத் தீா்க்காமல் தமிழக அரசின் கல்வித் துறை பதவி உயா்வை அளிக்கக் கூடாது. பணிமூப்பு சிக்கல் முதலில் தீா்க்கப்பட வேண்டும். இதற்காக விரைவில் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com