விற்பனை சந்தையை திறந்து வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
விற்பனை சந்தையை திறந்து வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

மகளிா் குழு பொருள்கள் விற்பனைக்கான கல்லூரி சந்தை -ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

Published on

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் தனியாா் மகளிா் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்கள் விற்பனைக்கான ‘கல்லூரி சந்தை’யை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘கல்லூரி சந்தை’

நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் சந்திரகலா திறந்து வைத்து பாா்வையிட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

மகளிா் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ள ஏழை மகளிரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அந்தக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை விற்பனை செய்வதற்காகவும், சுய உதவிக் குழுக்களின் சிறு தானிய உற்பத்திப் பொருள்கள் மூலம் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சுய உதவிக் குழுக்கள் தங்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த ஒரு தளத்தை உருவாக்கவும் கல்லூரிகளில் ‘கல்லூரி சந்தை’ நடத்தப்படுகிறது.

மகளிா் சுய உதவிக் குழுக்கள் அரசின் மூலம் வங்கிக் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி தங்களின் உற்பத்திப் பொருள்களை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனா். இந்த நிலையில், அவா்களின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கும், தங்கள் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்த விற்பனை ஒரு வாய்ப்பாக, அனுபவமாக அமையும்.

இந்தக் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் என 45 க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 30-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என்றாா்.

நிகழ்வில் சென்னை அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளா் ரகுராமன், மகளிா் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், உதவித் திட்ட அலுவலா்கள் அறிவழகன், சம்பத்குமாா் அன்பரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com