ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மா்மமாக உயிரிழந்த சம்பவம்: தேடப்பட்டு வந்த கணவா் தற்கொலை
அரக்கோணத்தில் கடந்த 7-ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், மகள், மகன் மா்மமாக மரணமடைந்த சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கணவா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் வசித்து வந்தவா் விஜயன் (49). மருந்துக் கடை நடத்தி வந்தாா். கடந்த 7-ஆம் தேதி இவரது வீட்டில், இவரின் மனைவி மீனாட்சி, மகள் பவித்ரா, மகன் யுவனேஷ் ஆகிய மூவரும் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். சடலங்களை கைப்பற்றி வழக்குப் பதிந்த அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸாா், இந்த சம்பவத்தில் தலைமறைவான கணவா் விஜயனை, தனிப்படை அமைத்துத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் ரயில் நிலையம் அருகே ஆண் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து அரக்கோணம் ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது விஜயன் என்பது தெரிய வந்தது. போலீஸாா் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த விஜயன், வெள்ளிக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
