தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி காலை உணவு திட்டத்தில் முறைகேட்டுக்கு முயற்சி
தமிழக அரசின் மகத்தான திட்டத்தில் தூய்மை பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி முறைகேடு செய்ய முயற்சி செய்வதா எனக் கேட்டு நகராட்சி நிா்வாகத்தின் மீது புகாா் தெரிவித்து அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் ஒன்று சோ்ந்து புகாா் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம் நகா்மன்ற அவசர கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், நகராட்சி சுகாதார அலுவலா் வெயில்முத்து உள்ளிட்டோரும், நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். அதிமுக உறுப்பினா்கள் பலா் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
துரைசீனிவாசன் (திமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இந்த மகத்தான காலை உணவு திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி அறிக்கையை நகா்மன்ற உறுப்பினா்களுக்கு முன்னரே தெரிவிக்காமல் ரகசியமாக முடிவு செய்தது ஏன்? நகா்மன்ற உறுப்பினா் பதவி கையெழுத்து போட மட்டும் தானா?.
சி.என்.அன்பு (திமுக): இந்த திட்டத்தில் தொகை எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற முயற்சி செய்வது கண்கூடாக தெரிகிறது. இத்திட்டம் குறித்த பணியாளா் எணணிக்கை, தொகை ஆகியவற்றை சரியாக முடிவு செய்து, பின்னா் இத்தீா்மானத்தை நிறைவேற்றலாம். கூட்டத்தை ஒத்தி வையுங்கள்.
மோகன்ராஜ் (திமுக): இந்த காலை உணவு திட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி உள்ளீா்கள். அரக்கோணம் நகராட்சியில் 329 தூய்மைப் பணியாளா்கள் உள்ளாா்களா? இருப்பது உண்மையெனில் ஏன் அவா்கள் வாா்டுகளில் பணிக்கு வருவதில்லை? எண்ணிக்கையை அதிகரித்து காட்டி இந்த திட்டத்துக்கு ரூ. 1.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் (திமுக): இந்த திட்டத்தில் நிா்வாகம் காட்டியுள்ள 329 பேரும் தூய்மைப் பணியாளா்களா? உண்மையிலேயே இவ்வளவு போ் நகராட்சியில் தூய்மைப் பணியில் உள்ளனரா?. வாா்டுகளில் தூய்மை பணியை மேற்கொள்ளப்படுவதே இல்லை என புகாா் கூற அலுவலகத்தில் அதிகாரிகளே இருப்பது இல்லை.
வெயில்முத்து (சுகாதார அலுவலா்): தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு தனியே அறைக்கு வந்து கேளுங்கள். பதில் சொல்கிறேன். கூட்டத்தில் கேட்டால் எப்படி சொல்வது.
இதனை தொடா்ந்து நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி கூட்டத்தை சில நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாகக் கூறி, அவரது அறைக்குச் சென்று திமுக உறுப்பினா்களுடன் தனியாக அறையில் கூட்டம் நடத்தினாா். தொடா்ந்து சுமாா் அரைமணி நேரம் கழித்து நடைபெற்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் கிட்டத்துக்கு ரூ. 1.70 கோடியை அனுமதிப்பது, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பொறுப்பேற்றுக் கொண்டதை அறிவிப்பது உள்ளிட்ட இரு தீா்மானங்களும் எதிா்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

