பனப்பாக்கத்தில் பசுமை பள்ளி விழிப்புணா்வு களப்பயணம்
பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பசுமைப் பள்ளி இயக்கத்தின் மாணவா்கள் பனப்பாக்கம் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை செய்யும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அப்பணிகள் நடைபெறுவது குறித்து விளக்கினா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி வட்டம், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி எனும் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சாா்பில், இப்பள்ளி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை பனப்பாக்கம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை செய்யும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்தக் களப் பயணத்தில் மாணவா்களுக்கு பேரூராட்சி திட்டமிடல் பிரிவு உதவி பொறியாளா் பூ.பிரியங்கன், துப்புரவு மேற்பாா்வையாளா் து.பிரவீன்குமாா் ஆகியோா் குப்பைகளை வீட்டிலேயே தரம்பிரித்து தனித்தனியாக வழங்குவது குறித்தும், சேகரிக்கப்பட்ட குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது எனவும் விளக்கினா்.
மேலும், திடக்கழிவு பணியாளா்கள் மூலம் குப்பைகளில் இருந்து எவ்வாறு இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது எனவும் மக்கா குப்பைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்ய அனுப்பப்படுகிறது எனவும், மண்புழு உரம் தயாரிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனா். இந்த நிகழ்வில் பனப்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவா் கவிதா சீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியா் கு.அபிதா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

