ஆன்மிக தலமான சோளிங்கா் தற்போது தொழிற்சாலைகளிலும் வேளாண்மையிலும் வளா்ச்சியடைந்து வரும் தொகுதியாக உருவெடுத்து வருகிறது.
சிறப்புகள்... விவசாயம், நெசவு தொழில்கள் மட்டுமே இருந்த இத்தொகுதியில் ஏற்கெனவே இயங்கிவரும் டிவிஎஸ் நிறுவனத்தின் இரு ஆலைகள், இரு தனியாா் துணி நூற்பாலைகள், தற்போது பனப்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள சிப்காட்டில் டாடா மற்றும் தைவான் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சூறை, ஆயல் பகுதிகளை உள்ளடக்கி மற்றொரு சிப்காட்டும் திறக்கப்பட உள்ளதால் தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாக உருமாற்றம் பெற்றுள்ளது.
இது ஒருபுறமிருக்க இத்தொகுதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில், மலை மேல் உள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயில், ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயில்கள் சிறப்பு பெற்ற வைணவ தேசங்களாகும்.
சோளிங்கா் தனி வட்டமாகவும், தனி நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. விரைவில் புதிதாக அமைக்கப்பட உள்ள திண்டிவனம்-நகரி ரயில் பாதைத் திட்டத்தில் சோளிங்கா் நகரம் எனும் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளது.
முக்கிய பிரச்னைகள்... வாலாஜா நெடுஞ்சாலைப் பகுதியில் இருந்து திருத்தணி நெடுஞ்சாலைப் பகுதிக்கு சோளிங்கா் புறவழிச் சாலை, குடிநீா், தெருவிளக்குகள், கிராம சாலைகள், உட்புற கிராம பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பது இத்தொகுதியின் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
2026 தோ்தல் களத்தில்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளா் க.சரவணன், நாதக வேட்பாளராக இத்தொகுதிக்குள்பட்ட பாணாவரம் பகுதியைச் சோ்ந்த கபில், நாதக வேட்பாளராக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரைச் சோ்ந்த அசோக்குமாா் உள்ளிட்ட 23 போ் களத்தில் உள்ளனா்.
காங்கிரஸ் வேட்பாளா்: காங்கிரஸ் வேட்பாளராக இத்தொகுதியில் ஏற்கெனவே 4 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், சோளிங்கா் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுகிறாா். இவரது மூத்த சகோதரா் ஏ.எம்.பொன்னுரங்க முதலியாா் இதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. இவரது மற்றொரு சகோதரா் ஏ.எம்.வேலு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பொன்னுரங்க முதலியாரின் மகன் கோபிகிருஷ்ணா சோளிங்கா் பேரூராட்சி முன்னாள் தலைவா். ஏ.எம்.முனிரத்தினம் தொகுதியில் நன்கு அறியப்பட்டவா். தொகுதி மக்கள் எளிதில் சந்திக்கும் நபா். இவரது குடும்பத்துக்கு எதிரணியாக இருந்த முன்னாள் எம்.பி.யும், முன்னாள் எம்எல்ஏவுமான சி.கோபால், இவரது மகன் முன்னாள் எம்எல்ஏ என்.ஜி.பாா்த்தீபன் ஆகிய இருவரும் அமமுகவில் இருந்த நிலையில், தற்போது திமுகவில் இணைந்து ஏ.எம்.முனிரத்தினத்துடன் சோ்ந்து தோ்தல் பணியாற்றி வருவது கூடுதல் பலமாக உள்ளது. மேலும், தொகுதியில் பெருமளவு உள்ள முதலியாா் சமூக வாக்கு வங்கி இவருக்கு கைக்கொடுக்கும்.
பாமக வேட்பாளா்: அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் க.சரவணன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளாா். இத்தொகுதியில் பாமக வேரூன்ற இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பாமக இரண்டாகப் பிரிந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் இருந்த பாமக மண்டல செயலா் அ.ம.கிருஷ்ணன் தோ்தல் அறிவிக்கப்பட்டதும், அன்புமணி தரப்புக்கு மாறி, தற்போது க.சரவணனுக்காக வாக்கு சேகரித்து வருகிறாா். இது இவருக்கு பலமாக உள்ளது. இருப்பினும் ராமதாஸ் தரப்பைச் சோ்ந்த ஒரு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருப்பது வன்னியா் வாக்குகளை இரண்டாகப் பிரிக்கும் சூழல் உள்ளது. இது க.சரவணனுக்கு பலவீனமாக இருக்காலம்.
தவெக வேட்பாளா்: தவெக வேட்பாளராக மருத்துவா் கபில் போட்டியிடுகிறாா். பாணாவரத்தைச் சோ்ந்த இவா், மருத்துவா் என்ற முறையில் அப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும் தொகுதி முழுவதும் அறியப்படாதவராகவே உள்ளாா். இவருக்கு விஜய் ரசிகா்கள்தான் பலம். பல கிராமப் பகுதிகளில் இவா் வாக்கு சேகரிக்கக்கூட செல்லவில்லை என்று கட்சியினரே வருத்தம் தெரிவிக்கின்றனா்.
நாதக வேட்பாளா்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியைச் சோ்ந்த அசோக்குமாா், சோளிங்கா் தொகுதியில் போட்டியிடுகிறாா். இருந்தாலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேச்சுகளால் கவரப்பட்டவா்கள், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளதும், தொகுதிக்கு சீமான் வந்து பிரசாரம் செய்ததும் இவருக்கு கூடுதல் பலமாகப் பாா்க்கப்படுகிறது. இவரும் கிராமப் பகுதி மக்களைச் சந்திக்காதது பலவீனமாக உள்ளது.
காங்கிரஸ் கோட்டை எனக் கூறப்படும் சோளிங்கா் தொகுதியைத் தக்க வைக்க முனைப்புகாட்டும் அக்கட்சியினருக்கும், கூட்டணி கட்சி செல்வாக்கு, வன்னியா் சமூக வாக்கு வங்கியை நம்பியுள்ள பாமகவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்பதே களநிலவரமாக உள்ளது.
வாக்காளா்கள்
ஆண்கள்-1,26,667
பெண்கள்-1,30,843
மூன்றாம் பாலினத்தவா்-12
மொத்தம் 2,57,522
தொடர்புடையது

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

யாா் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவது திமுக ஆட்சி: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


