ராணிப்பேட்டை ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை
ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் அறையில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ.25,850 ரொக்கம் மற்றும் 3 கிராம் தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2-ஆவது தளத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் திட்ட இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில், 2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பலரிடம் பரிசு பொருள்களை பெறுவதாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஆய்வு குழு துணை தலைவா் கோட்டீஸ்வரன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில், ராணிப்பேட்டை ஊழல் தடுப்பு டிஎஸ்பி. தலைமையிலான போலீஸாா், ஆய்வுக்குழுவினரின் உதவியோடு வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது ஊரக வளா்ச்சி துறை திட்ட இயக்குநா் அறையில் கணக்கில் வராத ரூ.25,850 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரி, 15 சா்ட், பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அலுவலக அறையில் பணம் இருந்ததால் அதனை கைப்பற்றிய போலீஸாா் கணக்கில் வராத பணம் மற்றும் நகை குறித்து ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் சரண்யா தேவியிடம் விசாரணை நடத்தினா்.
