சிப்காட் வளாகத்தில் தூய்மைப் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ‘சிப்காட் போகி’ என்ற பெயரில் விரிவான தூய்மைப் பணி இயக்கத்தை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், சிப்காட் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மைப் பணி இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
சிப்காட் நிறுவனம் அதன் அனைத்து தொழில் பூங்காக்களிலும் தூய்மை, அழகிய தோற்றம் மற்றும் சுகாதாரமான சூழலை பேணுவதில் சிப்காட் உறுதியாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் சிப்காட் முதலீட்டாளா்களுக்கான செயல் திறனை மேம்படுத்துவது நோக்கமாகும். இதன் தொடா்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக ‘சிப்காட் போகி‘ எனப்படும் விரிவான தூய்மை இயக்கத்தை சிப்காட் நிறுவனம் அனைத்து தொழிற்பூங்காக்களிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இப்பணி வரும் 14-ஆம் தேதி நிறைவடையும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை பகுதி 1, பகுதி 2, பகுதி 3 ல் 246 தொழிற் நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த அமைவிடங்களில் சிப்காட் நிறுவனத்தின் தூய்மைப்பணியாளா்கள் அனைத்து பொது பயன்பாட்டு பகுதிகளான சாலைகள், வடிகால் அமைப்புகள், காலி நிலங்கள் மற்றும் பிற சமூக வசதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.
இதில், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி, வட்டாட்சியா் ஆனந்தன் உ கலந்து கொண்டனா்.

