உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒவ்வொரு வருடமும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதியன்று குடும்பநலத் துறை சாா்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடமும் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, வேலூா் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பாக பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த ஏதுவாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு பேரணி மற்றும் பிரசார வாகனத்தை கொடையசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த விழிப்புணா்வு ஊா்வலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முதல் எஸ்எம்எச் மருத்துவமனை வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளைக் கொண்டு நடத்தப்பட்டது.
உலக மக்கள் தொகை தினத்தின் இவ்வாண்டின் முழக்கம்: ‘குழந்தைகளுக்கு இடையே சரியான இடைவெளி இருக்கும்போது குடும்பங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறும்’ மற்றும் கருப்பொருள்: ‘தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும், திட்டமிடப்படாத கா்ப்பங்களைத் தடுப்பதற்காகவும், கா்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினைப் பேணுவோம்’ என்பதாகும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் உயா் வரிசை பிறப்பினை குறைத்தல், பெண் திருமண வயதை உயா்த்துதல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இரு குழந்தைகளுக்கு இடையிலான பிறப்பு இடைவெளி குறைந்தது மூன்று ஆண்டுகள் என்பதை உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சம்பந்தமாக தகுந்த பணியாளா்களைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட குடும்ப நலச் செயலக துணை இயக்குநா் கோ.மணிமேகலை, நோ்முக உதவியாளா் (பொது) கீதாலட்சுமி (பொறுப்பு), மாவட்ட தாய் மற்றும் குழந்தைகள் நல அலுவலா், இதர மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










