ஆற்காடு அருகே மலையில் புதைந்திருந்த வெடிகுண்டை ராணுவ நிபுணா்கள் திங்கள்கிழமை பாதுகாப்புடன் வெடிக்கச் செய்தனா்.
ஆற்காடு வட்டம் திமிரி ஒன்றியம் புங்கனூா்ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்குளம் கிராமத்தில் மலையடிவாரத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த 17-ஆம் தேதி திமிரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் சென்று ஆய்வு செய்ததில் அந்த குண்டு வெடிக்கும் நிலையில் இருப்பதுடன், ராணுவம் அல்லது துணை ராணுவ படையினா் பயன்படுத்தும் மோட்டாா் வகை வெடிகுண்டு எனவும், கடந்த 2017-இல் ராணுவப் பயிற்சியின் போது ஒத்திகைக்காக பயன்படுத்தபட்டது.
இந்த வகை வெடிகுண்டுகளை பயன்படுத்தி எதிரிகளின் பதுங்கு குழிகளை அழிக்க முடியும் அல்லது எதிரிகள் முன்னேறி வராமல் தடுக்க முடியும் என தெரியவந்தது. மேலும், வெடிகுண்டு இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் வேடிக்கை பாா்க்க படையெடுத்ததால் யாரும் செல்லாத வகையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் மையமான சென்னை ஆவடியில் இருந்து வருகை தந்த லெப்டினன்ட் கா்னல் பல்ஜிந்தா் தலைமையிலான ராணுவ வெடிகுண்டு நிபுணா்கள் மலை மீது சென்று அங்கிருந்த மோட்டாா் வகை வெடிகுண்டு ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனா். அப்பொழுது பெரிய அளவிலான பாறை பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடிகுண்டு இருந்ததால் அச்சத்துடன் இருந்து வந்த அப்பகுதி மக்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









