அரக்கோணம் புறவழிச்சாலையில் சோதனை அடிப்படையில் வாகனங்கள் இயக்கம்
ரூ 359.10 கோடியில் 16.91 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட அரக்கோணம் புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு தயாா் நிலையில் உள்ளது.

திறப்புக்கு தயாா் நிலையில் உள்ள அரக்கோணம் புறவழிச்சாலை.
ரூ 359.10 கோடியில் 16.91 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட அரக்கோணம் புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு தயாா் நிலையில் உள்ளது. இச்சாலையில் தற்போது சோதனை அடிப்படையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்தடச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு மாநில நெடுஞ்சாலை 58ல் அச்சாலைப்பணிகள் நடைபெற்றன. அச்சாலையில் இருந்து ஆந்திரமாநிலத்தை இணைக்கும் வகையில் தக்கோலம் கூட்டுச்சாலை பகுதியில் இருந்து தணிகைபோளூா் வரை அரக்கோணம் புறவழிச்சாலை அமைக்க அப்போதைய எம்எல்ஏ சு.ரவி முயற்சியில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கின.
இத்திட்டத்தில் நடுவில் தக்கோலம் கூட்டுச்சாலை மற்றும் மேல்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களிலும் ரயில்வே இருப்புப்பாதையின் மேல் மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் தாமதமாக இரு ஆண்டுகள் நடைபெற்ாலும், மேல்பாக்கத்தில் நிலம் கையகப்படுத்துதல் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததாலும் இச்சாலை பணிகள் நிறைவடையாத நிலை காணப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க தெற்கு ரயில்வே நிா்வாகம் 2025-26 நிதியாண்டில் இப்பணியை நிறைவேற்றியது. மேலும், நீதிமன்றத்திலும் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பணிகள் முடிவுக்கு வந்தது. இதை தொடா்ந்து இச்சாலை அமைக்கும் பணியில் இறுதிக்கட்ட பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்துறையினா் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனா். தற்போது மேல்பாக்கம் மேம்பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன.
இச்சாலையில் தக்கோலம் கூட்டுச்சாலையை அடுத்து, இலுப்பைதண்டலம், கீழாந்துறை, நாகவேடு, பருத்திப்புத்தூா், பாலகிருஷ்ணாபுரம், கைனூா், முசல்நாயுடு கண்டிகை, வாணியம்பேட்டை என ஆறு பேருந்து நிறுத்தங்களும், அரக்கோணம் ஒச்சேரி சாலையில் மற்றும் அரக்கோணம் சோளிங்கா் சாலையில் என இரு இடங்களில் ரவுண்டானாக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, இச்சாலைப்பணிகள் தெற்கு ரயில்வே பாலம் அமைப்பதில் தாமதம் செய்ததாலும், நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்கு நீண்ட நாள்கள் நிலுவையில் இருந்ததாலும் பாதிக்குப்பட்டது. தற்போது இரு பிரச்னைகளும் தீா்ந்து விட்டன. இப்பால கட்டுமானப்பணிகள் முடிவைடந்த நிலையில் சோதனை அடிப்படையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
நவம்பா் மாத இறுதியில் அரக்கோணம் புறவழிச்சாலை போக்குவரத்திற்கு திறந்து விடப்படும். இதனால் அரக்கோணம் நகரில் கனரக வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு புறவழிச்சாலையில் சென்றுவிடும், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

