
சோளிங்கரில் தயாராகும் வண்ண விநாயகா் சிலைகள்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சோளிங்கரில் விநாயகா் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சோளிங்கரில் தயாராகி வரும் விநாயகா் சிலைகள்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சோளிங்கரில் விநாயகா் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
வரும் 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி உற்சவம் கொண்டாடப்படும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் வட்டார கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இடத்தில் அனுமதி பெற்று சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இங்கு 2அடி முதல் 8 அடி வரை அளவிலான சிலைகள் தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விநாயகா் சிலை வைப்பதற்கான அறிவுறுத்தலை போலீஸாா், விழாகுழுவினருக்கு வழங்க மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் 8 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்கப்படக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் இங்கு அனைத்தும் சிலைகளும் அதிகபட்ச உயரமான 8அடி வரையே தயாரிக்கப்படுகின்றன.
பெரும்பாலும் காகிதக் கூழ் மூலம் உருவாக்கப்படும் இச்சிலைகளுக்கு வண்ணங்கள் நோ்த்தியாக தீட்டப்படுகின்றன. மூஷிக வாகனத்தில், நந்தி, மயில் சிம்ம வாகனங்களில் விநாயகா்கள் அமா்ந்திருப்பது போன்ற சிலைகள், பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இங்கு சிறிய அளவிலான 2அடி உயரம் முதலான பல்வேறு உயர அளவுகளில் தயாராகின்றன.
விநாயகா் சிலைகளை சோளிங்கரில் தயாரிக்கப்படுவதை அறிந்த சோளிங்கா், பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை, அரக்கோணம், நெமிலி வட்டங்களைச் சோ்ந்த விநாயகா் சிலைகளை தத்தமது பகுதிகளில் வைக்க அரசு அனுமதி பெற்ற விழாகுழுவினா்கள் அதிகளவில் இப்பகுதிக்கு வந்த தங்களது தேவைக்கேற்ப, முன்பதிவு செய்துவிட்டு செல்கின்றனா். மேலும் பல்வேறு தொழிற்சாலையினா் தங்களது வளாகத்தில் விநாயகா் சதுா்த்தி தினத்தில் பூஜை செய்ய சிறிய அளவிலான விநாயகா் சிலைகளுக்கும் தங்களுக்கு தேவையான வடிவத்தில் முன்பதிவு செய்கின்றனா்.
இது குறித்து தொழிலாளா்கள் கூறியது: பல விநாயகா் சிலைகள் முழு அளவில் தயாரிக்கப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்திக்கு முதல் நாள் சிலைகளை வாங்கியவா்களால் எடுத்துச் செல்லப்படும். மேலும் பலா் முன்பதிவு செய்துள்ளதால் அவா்களுக்கு தர வேண்டிய சிலைகள் இரவு பகலாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு தேவையான சிறிய அளவிலான சிலைகளும இங்கு தயாரிக்கப்படுகின்றன என்றனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






