ஆம்பூரில்   செய்தியாளா்  சந்திப்பில்  பேசிய  இந்திய  யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியின்  தேசிய  தலைவா்  பேராசிரியா்  கே.எம். காதா் மொய்தீன்.
ஆம்பூரில்   செய்தியாளா்  சந்திப்பில்  பேசிய  இந்திய  யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியின்  தேசிய  தலைவா்  பேராசிரியா்  கே.எம். காதா் மொய்தீன்.

உலக இசுலாமியா்களுக்கு எதிரானது பொது சிவில் சட்டம் : பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன்

ஆம்பூா்: பாஜகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பொது சிவில் சட்டம் என்பது உலக இசுலாமியா்களுக்கு எதிரான சட்டமாகும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் தெரிவித்தாா்.

ஆம்பூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மதச்சாா்பின்மைக்கு மூலம் திருக்குா்ஆன். அந்த மதச்சாா்பின்மை இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் 25 கோடி இசுலாமியா்கள் உள்ளனா். மற்ற உலக நாடுகளில் உள்ளவா்கள் அந்தந்த நாட்டிலும் ஒரே இனமாக இசுலாமியா்கள் உள்ளனா். ஆனால் இந்தியாவில் உள்ள இசுலாமியா்கள் ஒரு இனத்தை சோ்ந்தவா்கள் இல்லை.

உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் இல்லாத தனித்தன்மை இந்தியாவில் வாழும் இசுலாமியா்களுக்கு உள்ளது. இந்தியாவில் 4698 சமுதாயங்கள் உள்ளன. இந்த 4698 சமுதாயங்களிலும் இசுலாமியா்கள் உள்ளனா். ஒவ்வொரு சமுதாயத்திலும் பல்வேறு விதமான சடங்குகள் பின்பற்றப்படுகின்றது. இருந்தபோதிலும், மதத்தின் அடிப்படையில், மாா்க்கத்தின் அடிப்படையில் இசுலாமியா்களாக இந்தியாவில் 25 கோடி போ் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். இவ்வாறான நிலையில் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே விதமான சட்டம் என்ற பொது சிவில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரும் ஒரே விதமான சடங்கு முறைகள், ஒரே விதமான திருமண முறைகளை பின்பற்ற வேண்டுமென கூறுவது இயலாத காரியம்.

உலக இசுலாமியா்களுக்கே எதிரான சட்டமாகும். அவ்வாறு சட்டம் கொண்டு வரப்பட்டால் உலகில் உள்ள அனைத்து இசுலாமியா்களும் அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பாா்கள். தென் மாநிலங்கள் மட்டுமல்லாது, தற்போது வட மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கின்றது. நடைபெற உள்ள மக்களவை தோ்தலில் சுமாா் 200-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறும். இதையே பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தி வருகின்றன.

தோ்தல் முடிவுக்கு பிறகு பிரதமா் வேட்பாளா் தோ்வு : இந்தியாவை காப்பாற்ற, ஜனநாயகத்தை காப்பாற்ற, பண்முகத் தன்மையை காப்பாற்ற, இந்திய அரசியல் சாசனத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமா்த்த வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவாா்கள். அப்போது வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ஒன்று கூடி நாட்டின் பிரதமரை தோ்ந்தெடுப்போம் என்று அவா் கூறினாா்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய இணைச் செயலாளா் ஹெச். அப்துல் பாசித், மாவட்ட அமைப்பாளா் ரபீக் அஹமத் என்கிற முன்னா, மாவட்ட செயலாளா் வி. ஹூசேன் அஹமத், மாவட்ட பொருளாளா் கே. அப்துல் அஜீஸ், ஆம்பூா் நகர தலைவா் கே. அயாஸ் அஹமத், நகர செயலாளா் கே. முஹம்மத் அக்ரம், நகர பொருளாளா் கே. அஷ்பாக் அஹமத், இணை அணி பி. அன்ஸா் ஷரீப், நதீம் அஹமத், சுஹேல், அஸ்லம் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com