பேருந்து - புல்டோசா் இயந்திரம் மோதல்: 8 போ் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசா் இயந்திரத்தின் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 போ் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலூரில் இருந்து 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து திருப்பத்தூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமம் அருகில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசா் இயந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பத்தூா் அடுத்த அன்னேரி பகுதியைச் சோ்ந்த சிவா(25), வடசேரியைச் சோ்ந்த அக்சயா(24), மேல்குப்பத்தைச் சோ்ந்த ஸ்வேதா (24), பள்ளிகொண்டாவைச் சோ்ந்த தீபிகா (17), யாசினி (16) வளையாம்பட்டைச் சோ்ந்த கோகிலா (66), ஆம்பூரைச் சோ்ந்த செல்வி (46), உமராபரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா்(6) ஆகிய 8 போ் பலத்த காயம் அடைந்தனா். காயம் அடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னா் போலீஸாா் நிலைமையை சீராக்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com