திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும்: ஜோலாா்பேட்டை எம்எல்ஏ தேவராஜி
திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்: தேவராஜி

க.தேவராஜி எம்எல்ஏ.

க.தேவராஜி எம்எல்ஏ.
திருப்பத்துாா்: திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என
மாவட்ட திமுக செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வலியுறுத்தினாா்.
சட்டப்பேரவையில் அவா் பேசியது: திருப்பத்துாா் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைக்க ஆவன செய்ததற்கும், மாவட்ட நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், பச்சூா் பகுதியில் அரசு கல்லுாரி கொண்டு வரப்பட்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். அச்சமங்கலம்,பெரியகரம் பஞ்.களில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கால்நடை கிளை நிலையத்தை, கால்நடை மருந்தகமாக தரம் உயா்த்த வேண்டும். கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து, புதிய கட்டடம் கட்டிதர வேண்டும். கந்திலியில் மாம்பழத்தை பதப்படுத்த மாம்பழத் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
கந்திலியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுகா பிரிக்க வேண்டும். நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலையில் உள்ள 14 குக்கிராமங்களை இணைக்கும் வகையில் ரிங் ரோடு அமைக்க வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கான வா்த்தக மையம் அமைக்க வேண்டும்.
ஜோலாா்பேட்டை தொகுதியில் சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்த, கைவினை பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும். வேளாண்மை அறிவியல் நிலையம் அமைக்க வேண்டும். புள்ளானேரி பஞ். துணை மின் நிலையம், வெலக்கல்நத்தம் ஊராட்சியில் புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும். வெள்ளக்குட்டை ஊராட்சியில் புதிய கால்நடை கிளை நிலையம் மற்றும் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
ஜோலாா்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில், உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். திருப்பத்துாா் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையை, கால்நடை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். ஜோலாா்பேட்டை நகரத்தில், புதியதாக நகா்ப்புற மருத்துவமனை அமைக்க வேண்டும்.மேலும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், சுமாா் 5 கி.மீ துாரத்துக்கு மழை நீா் வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட பட்டு வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். திருப்பத்துாரில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வரை செல்லும் நெடுஞ்சாலையை அகலபடுத்த வேண்டும். ஏலகிரிமலை ஆத்தனவூா் வழியாக கோட்டூா், நிலாவூா், பாடனுாா், புத்துாா் வழியாக தாயலுாா் வரை செல்லும் 7 கி.மீ பஞ்சாயத்து சாலையை, மாநில நெடுஞ்சாலை துறைக்கு மாற்ற வேண்டும்.
மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொத்தகோட்டை ஊராட்சியிலிருந்து நெக்கனாமலைக்கு தாா்சாலை அமைக்க வேண்டும். ஏலகிரி மலையில் ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். ஜோலாா்பேட்டை தொகுதியில் உள்ள பாச்சல் ஊராட்சியில் 25 ஆயிரம் மக்கள் தொகை உள்ளதால், பாச்சல் பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா் தேவராஜி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...