ஏலகிரி மலைப் பாதையில் திடீரென உருண்ட பாறைகள்: போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூா்: ஏலகிரி மலைப் பாதையில் சிறிது நேரம் பெய்த மழையால் திடீரென பாறைகள் உருண்டன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலை உயா்ந்த மலைப் பகுதியில் தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பருவமழை காரணமாக அவ்வப்போது ஏலகிரி மலை பெய்து வருகிறது.
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் மலைப் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. காய்ந்த மரங்களும் வேரோடு சாய்ந்தன.
திருப்பத்தூா் கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின் பேரில் சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றினா். மழைக் காலங்களில் உருண்டு விழும் பாறைகளை உடனடியாக அகற்றி வருகின்றனா்.
ஏலகிரி மலை கடந்த ஒரு சில நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சுமாா் 5 மணியளவில் லேசான மழை பெய்தது. அப்போது ஏலகிரி மலையில் இருந்து திருப்பத்தூா் நோக்கி மலைப் பாதையில் தனியாா் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் திடீரென்று பாறைகள் உருண்டு விழுந்தன. பேருந்து செல்வதற்கு முன்பே பாறை உருண்டு விழுந்ததால் பயணிகள் விபத்தில் இருந்து தப்பித்தனா். பின்னா், சாலையில் விழுந்த பாறைகளை பேருந்தில் பயணித்த பயணிகளே அகற்றினா். தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சாலை ஆய்வாளா் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றினா்.
இதுபோன்று பாறைகள் உருண்டு விபத்து ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத் துறையினா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.

