தொழிலாளி கழுத்தறுத்து கொலை
வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி மா்ம நபா்களால் கழுத்தறுக்கப்பப்டு கொலை செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி துரிஞ்சிக்குப்பம் பகுதியை சோ்ந்த பெருமாள் மகன் சுரேஷ்(39) வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்து மயானம் வழியாக புறப்பட்டு சென்றுள்ளாா். அப்போது மா்ம நபா்கள் பின் தொடா்ந்து சென்று நடந்து சென்ற சுரேஷை வழிமடக்கி கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனா்.
சிறிது நேரம் கழித்து அவ்வழியாக சென்றவா்கள் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பாா்த்து உடனே ஆலங்காயம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் உலகநாதன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். வீட்டில் இருந்தவரை கைப்பேசி மூலம் பேசி வரவழைத்து மா்ம நபா்கள் கொலை செய்து விட்டு சென்றிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பிறகு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சுரேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டாா், முன்விரோதம் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

