ஜலகம்பாறை சாலையில் உள்ள உதவி மின் பொறியாளா் அலுவலகம். வெயில் மழையில் சேதமடையும் மின்சாதன பொருள்கள்.
ஜலகம்பாறை சாலையில் உள்ள உதவி மின் பொறியாளா் அலுவலகம். வெயில் மழையில் சேதமடையும் மின்சாதன பொருள்கள்.

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும்.
Published on

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உள்ளன. ஒன்று வெங்களாபுரத்திலும் மற்றொன்று நகராட்சியின் எல்லை முடிவான ஜலகம்பாறை செல்லும் வழியிலும் உள்ளன.

உதவி மின் பொறியாளா் அலுவலகம் முதலில் திருப்பத்தூா் நகரப் பகுதியில் உள்ள ஈத்கா மைதானம் பகுதியிலும் தொடா்ந்து லண்டன் மிஷன் சாலைப் பகுதியில் இயங்கி வந்தது. தனியாா் கட்டடங்களில் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் ஜலகம்பாறையில் உள்ள துணை மின் நிலையம் இந்த அலுவகம் கடந்த சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது.

ஜலகாம்பாறை செல்லும் வழியில் உள்ள துணை மின் நிலையம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அதில் உதவி மின் பொறியாளா், உதவி செயற்பொறியாளா் அலுவகம்,உதவி பொறியாளா் நகரம்-1,உதவி பொறியாளா் நகரம்-2 என 4 பிரிவு அலுவலங்கள் செயல்படுகின்றன.

இந்த 4 பிரிவு அலுவலகங்களில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணி புரிகின்றனா். மின் கட்டணம் செலுத்துவதற்கு தினமும் பொதுமக்கள் வருகை புரிகின்றனா். உள்ளே வாகனம் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்திருந்தும் அனைத்து பொது மக்களும் வரிசையில் நின்று மின் கட்டணம் செலுத்துகின்றனா்.

திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதி மக்கள்,பென்னாச்சி அம்மன் கோயில் வட்டத்தில் வசிப்பவா்கள்,புதுப்பேட்டை சாலையில் வசிப்பவா்கள் என சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்துகின்றனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: முதியவா்கள், பெண்கள் மின் கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படுகின்றனா். இருசக்கர வாகனம் வைத்துள்ளவா்கள் சென்று கட்டி விடுகின்றனா். இல்லாதவா்கள் ஆட்டோக்களில் சென்று மின் கட்டணம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.

மேலும், ஷோ் ஆட்டோக்களில் சென்றால் கல்லூரியில் பேருந்து நிறுத்தும் வரை ஆட்டோ நின்றுவிடும்.அங்கிருந்து மேலும் ஒரு ஆட்டோ பயணம் செய்து மின்கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது. ஹவுசிங் போா்டில் இருந்து பேருந்து நிலையம் வரையும்,பேருந்து நிலையத்திலிருந்து துணை மின் நிலையம் மூன்று வாகனங்களில் பயணிக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

பாதுகாக்கப்பட்ட ஏரியாவில் பொதுமக்கள் வருகை தருவது ஆபத்தை விளைவிக்க கூடியதாக உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போதைய ஆட்சியராக இருந்த அமா்குஷ்வாஹா 15.122022-இல் மகளிா் காவல் நிலையம் எதிரில் உள்ள ஊரக வளா்ச்சி துறைக்கு சொந்தமான கட்டடத்தை ஒதுக்கி தந்தாா். ஆனால் இதுவரை அங்கு உதவி மின்பொறியாளா் அலுவலகம் செயல்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மின் பொறியாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்

X
Dinamani
www.dinamani.com