வாணியம்பாடி பாலாற்று பெருவெள்ளத்தில் உயிா் நீத்தோருக்கு அஞ்சலி
வாணியம்பாடி பாலாற்று பெருவெளத்தில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 1903-ஆம் ஆண்டு நவம்பா் 12-ஆம் தேதி பாலாறு நீா்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏரிகள் உடைந்து மிகப்பெரிய வெள்ளம் இரவில் வாணியம்பாடி நகரத்தை சூழ்ந்துள்ளது.
நடுஇரவில் அயா்ந்து தூங்கிக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா். இந்த நிகழ்வு குறித்து இந்தியாவின் அன்றைய வைஸ்ராய் லாா்ட் கா்சன் லண்டனிலிருந்து விக்டோரியா மகாராணிக்கு தந்தி மூலம் தகவல் அனுப்பினாா்.
இந்த பாலாற்று பெருவெள்ளம் தற்போது கச்சேரி சாலையில் 5 அடி உயரத்துக்கு நீா் சென்று இருக்கிறது. இதன் நினைவாக அன்றைய ஆங்கிலேய அரசு வாணியம்பாடி நகராட்சி சாா்பாக அந்த இடத்தில் நினைவுத்தூண் நிறுவினா். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிா் இழந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 122-ஆவது ஆண்டை முன்னிட்டு கச்சேரிசாலை- இணைப்பு சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பழைய நினைவுத் தூணுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் புறப்பட்ட அமைதி ஊா்வலத்தில் திரளானோா் கலந்து கொண்டு சிஎல்.ரோடு, வாரச்சந்தை சாலை வழியாக சென்று அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து நகர திமுக செயலாளா் சாரதி குமாா் தலைமையில் ரவுண்டானா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகா்மன்ற தலைவா் உமாசிவாஜிகணேசன் கலந்து கொண்டு நிணைவுத்தூணை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் உதயேந்திரம் பேரூராட்சி செயலாளா் செல்வராஜ், வாா்டு உறுப்பினா்கள் மா.பா.சாரதி, நாசிா்கான், முத்தமிழ் மன்ற செயலாளா் பிரகாசம், அம்பலூா் அசோகன் அஞ்சலி செலுத்தினா்.

