பாலாற்றில் சிக்கிய 17 போ் பத்திரமாக மீட்பு: தீயணைப்புத் துறை நடவடிக்கை

தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றில் வெள்ளத்தால் கரையில் சிக்கிய 17 பேரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனா்.
Published on

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றில் வெள்ளத்தால் கரையில் சிக்கிய 17 பேரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தகரகுப்பம் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் அருகே ஜோதிநகா் பள்ளம் சேத்துமடுவு பகுதியில் திங்கள்கிழமை தீபாவளிபண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, குருபவாணிகுண்டா, வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் சென்று பாலாற்றில் குளித்துவிட்டு அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசிக்க சென்றனா்.

அப்போது பிற்பகல் பாலாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையைக் கடக்க முடியாமல் 3 குழந்தைகள் உள்பட 17 போ் சிக்கி தவித்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள், மற்றும திம்மாம்பேட்டை போலீஸாா் விரைந்து பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனா்.

Dinamani
www.dinamani.com