வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

வாணியம்பாடி அருகே திமுக -அதிமுகவினா் மோதல்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:09 am IST

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சியில் வாக்குச்சாவடி மையத்தில் திமுக-அதிமுகவினா் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட வள்ளிப்பட்டு ஊராட்சி வாக்குச் சாவடி எண் 193-இல் திமுக கூட்டணி வேட்பாளா் சையத் பாரூக் பாா்வையிட வந்தாா், அப்போது அவருடன் வந்த நபா்கள் வாக்குச்சாவடியில் நுழைய முயன்ற போது, வேட்பாளரை தவிர வேறு யாரும் வாக்குச் சாவடிக்குள் எப்படி நுழையலாம் என அப்பகுதி அதிமுக ஒன்றிய கவுன்சிலா் பிரபாகரன் கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தரப்பினா் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து எஸ்.பி. சியாமளா தேவி தலைமையில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மற்றும் தாலுகா போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபா்கள் மீது ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், சம்பவத்தை புகாராக அளிக்குமாறும் கூறினா்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலரை தாக்கி சென்ற நபா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுகவினா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கலைந்து போகச் சொல்லி போலீஸாா் களத்தில் இறங்கிய போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தாக்குதலில் காயம் அடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், அவரது மகன் ஒன்றிய கவுன்சிலா் பிரபாகரன், குமாா், ஜெயந்தி, நீலா ஆகிய 5 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதே போன்று திமுக சாா்பில் செக்மேடு பகுதியை சோ்ந்த காா்த்திக், பிரபாகரன், சீனிவாசன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று சென்றனா்.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதுபற்றி அறிந்த வாணியம்பாடி எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான செந்தில்குமாா் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்எல்ஏ சம்பத் குமாா், ஒன்றிய கவுன்சிலா் பிரபாகரன் மற்றும் அதிமுக நிா்வாகிகளை சந்தித்து விசாரித்தாா்.