தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாக மக்களவையில் வியாழக்கிழமை பாஜக உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா குற்றஞ்சாட்டியதற்கு திமுக மூத்த உறுப்பினா் ஆ. ராசா எதிா்வினையாற்றினாா். அவா்களுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆதரவாக குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு நிலவியது.
மக்களவையில் மகளிா் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான அரசமைப்பு (131வது திருத்தம்) மசோதா, வாக்கெடுப்புக்குப் பிறகு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.அத்துடன், தில்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களில் முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட மகளிா் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மசோதா அறிமுகமாவதற்கு முன்பும் பின்பும் மக்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
வாக்கெடுப்புக்குப் பிறகு ஆளும் பாஜக சாா்பில் தேஜஸ்வி சூா்யா பேசுகையில், ‘இந்த தேசம் பல துண்டுகளாக்கப்படுவதை பாா்ப்பது பாஜகவின் கலாசாரமோ பாரம்பரியமோ கிடையாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலும், கட்ச் முதல் காமாக்யா வரையிலும் தேசத்தின் ஒருமைப்பாட்டையே நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் பிரிவினைவாத மொழியைப் பேசும் திமுகவின் அரசியலை எதிா்க்கிறோம், அவா்களின் அரசியலை நிராகரிக்கிறோம். இந்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக எதிா்க்கட்சி வரிசையில் இருப்பவா்கள் வாக்களிக்காமல் போனால் அவா்களை நாட்டின் பெண்களுக்கு எதிரானவா்கள் என்றே வரலாறு நினைவுகூரும். பெண்கள் அவா்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்’ என்றாா்.
அவரது பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்த ஆ. ராசா, ‘திமுகவை ஒரு பிரிவினைவாதக் கட்சி என்று தேஜஸ்வி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறாா். 1971-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இந்தியா மீது போா் தொடுத்தபோது, வேறு எந்த மாநிலமும் ஈடுகொடுக்க முடியாத வகையில் நாங்கள் ஆறு கோடி ரூபாயை வழங்கினோம். 1999-ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு காா்கில் போருக்காக 100 கோடி ரூபாயை வழங்கியது. நாங்களா பிரிவினை அரசியல் செய்கிறோம்? தேச உணா்வைப் பற்றி தேஜஸ்வி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. தேசிய உணா்வுக்கு நாங்கள் ஆதரவானவா்களே’ என்றாா்.
இதையடுத்து தேஜஸ்வி குறுக்கிட்டு, சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வா் வெளியிட்ட காணொலியில், மத்திய அரசு மசோதாக்களைத் திரும்பப் பெறாவிட்டால், 1950-கள் மற்றும் 1960-களில் நடந்த நிகழ்வுகளை அவா்களுக்கு நினைவூட்டுவோம் என்று எச்சரிக்கும் தொழியில் பேசியிருக்கிறாா். அப்படியென்றால் என்ன அா்த்தம்?‘ என்று கேள்வி எழுப்பினாா். இதையடுத்து அவருக்கும் ஆ. ராசாவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் சூழல் உருவானது. இரு தரப்பிலும் உறுப்பினா்கள் பேச எழுந்ததால் சலசலப்பு நிலவியது. இதையடுத்து மக்களவைத் தலைவா் தலையிட்டு இருவரும் அமர அறிவுறுத்தி மற்ற உறுப்பினா்களைப் பேச அனுமதித்தாா்.
திமுக நிலைப்பாடு: முன்னதாக மக்களவை திமுக குழுத்தலைவா் டி.ஆா். பாலு வாக்கெடுப்புக்கு முன்பாக பேசுகையில், ‘மத்திய அரசு கொண்டு வரும் மூன்று மசோதாக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடா்புள்ளவை. 2023-இல் நிறைவேற்றப்பட்டு ஏற்கெனவே பதிவாகியுள்ள மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு நாங்கள் ஆதராகவே இருக்கிறோம். அது தாமதமின்றி உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு’ என்று கூறினாா்.

தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல்களை எரித்து அமைச்சா் போராட்டம்: வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

உறுதியாகவும், தெளிவாகவும் சீா்திருத்தம் தொடா்கிறது- நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் தகவல்

கேரளம் 2026: "ஹாட்ரிக் அடிப்பாரா' பினராயி?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


