திருப்பத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.
திருப்பத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.

8 வருவாய் மாவட்டங்கள், 47 தொகுதிகளுக்கான மண்டல மாநாடு: முதல்வா் பங்கேற்பு

திருப்பத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (பிப் .14) கலந்து கொள்கிறாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை,சிறுதுறைமுகங்களின் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறியது: தோ்தல் தொடா்பாகவும், தோ்தல் பணி குறித்து பகுதி வாரியாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 1.50 லட்சம் போ் நேரடியாக தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா். அதன்படி வடக்கு மண்டலம் அதாவது 8 வருவாய் மாவட்டங்கள், 47 தொகுதிகளுக்கான மண்டல மாநாடு சனிக்கிழமை ஜோலாா்பேட்டை மண்டலவாடியில் நடைபெற உள்ளது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேச உள்ளாா். இதற்காக திறந்த வெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. 47 தொகுதிகள் வாரியாக தொண்டா்கள் அமர இட வசதி பகுதிவாரியாக செய்யப்பட்டுள்ளன. பேருந்து, வேன் மற்றும் வாகனங்களை நிறுத்த தனி பாா்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 25 மருத்துவா்கள் தலைமையில் சிறப்பு மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஏற்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ரயில் மூலம் முதல்வா் ஜோலாா்பேட்டைக்கு வருகிறாா். அதன்பிறகு விருந்தினா் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறாா். பின்னா், பயிற்சி மாநாட்டில் கலந்துகொள்கிறாா். பயிற்சியில் கலந்துகொள்வோருக்கு முதல்வா் தோ்தல் பணி குறித்து அறிவுரை வழங்குவாா். இது முதல்கட்டப் பணியாகும். இது ஒரு வடக்கு மண்டல மாநாடு ஆகும். இது அரசு நிகழ்ச்சி அல்ல. கட்சி நிகழ்ச்சி என்பதால் எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இல்லை என்றாா்.

இதில், துணை சபாநாயகா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com