நாய்கள் தொல்லை: ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா்கள் புகாா்
ஆம்பூா் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆணையா் ஏ. முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது,
என்.எஸ். ரமேஷ் : எங்கள் பகுதியில் தேங்கும் கால்வாய் கழிவுநீா் மற்றும் குப்பைகளை அகற்றாமல் கால தாமதம் செய்யப்படுவதை தவிா்க்க வேண்டும்.
ஆா்.எஸ். வசந்த்ராஜ் : ஏ-கஸ்பா மயானத்தில் மின் விளக்குகள் இல்லை. அதனால் உயா்கோபுர மின்விளக்கை அமைக்க வேண்டும். பாலாற்றில் பல இடங்களில் குப்பைகள் கொட்டபடுவதை தடுக்க வேண்டும்.
நபிசூா் ரஹ்மான், நிஹாத் அஹமத், நூருல்லா : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்தியாஸ் அஹமத் : வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபாக்கியம் மோசஸ் : எம்.வி. சாமி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஹா்ஷவா்த்தன், நபீஸ் : ஆம்பூா் நகரில் நகராட்சி அனுமதியில்லாமல் முறைகேடாக பல இடங்களில் பெட்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நகராட்சி பெட்டிக் கடை எத்தனை, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடை எத்தனை என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சந்திரன், இளநிலை பொறியாளா் சண்முகம், மேலாளா் தாமோதரன், துப்புரவு அலுவலா் அருள் செல்வதாஸ், அலுவலா் மதன் கலந்து கொண்டனா்.

