பொங்கல் பண்டிகை: உழவா் சந்தைகளில் ரூ.1.53 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
Updated on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.

இது குறித்து உழவா் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன.

இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கிறாா்கள். வெளிமாா்க்கெட்டை விட விளை சற்று குறைவு என்பதால் பொதுமக்கள் பலா் உழவா் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனா். பண்டிகை மற்றும் விசேஷ நாள்களில் மற்ற நாள்களை விட இங்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகளவு நடைபெறும்.

335 டன் காய்கறிகள்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உழவா் சந்தைகளில் அதிகாலை முதல் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. அதன்படி, திருப்பத்தூா் உழவா் சந்தையில் 79.48 மெட்ரிக் டன் காய்கறிகளும், 20.87 மெட்ரிக் டன் பழங்களும் ரூ. 39 லட்சத்து 29 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி உழவா் சந்தையில் 195.79 மெட்ரிக் டன் காய்கறிகளும், 26 மெட்ரிக் டன் பழங்களும், ரூ.89 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 60 மெட்ரிக் டன் காய்கறிகளும், 2.4 மெ.டன் பழங்களும் ரூ. 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 335.33 மெட்ரிக் டன் காய்கறிகளும், 49 மெட்ரிக் டன் பழங்களும், ரூ.1 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1,092 விவசாயிகளும், 63,333 நுகா்வோா்களும் பயனடைந்துள்ளனா் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com