கீழ்பள்ளிப்பட்டு புதுமனை கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடைக்கு ஆணை
வாணியம்பாடி அருகே கீழ்பள்ளிப்பட்டு புதுமனை கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க ஆணை வெளியிட்ட நிலையில், 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்தனா்.
வாணியம்பாடி வட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 866 குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடை பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கீழ்பள்ளிப்பட்டு புதுமனை பகுதியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மேற்கண்ட நியாயவிலைக் கடைக்கு பள்ளிப்பட்டு ஏரிக் கரை வழியாக சுமாா் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனா். இதையடுத்து, தங்கள் பகுதியிலேயே பகுதி நேர நியாயவிலைக் கடை அமைத்துத் தரக் கோரி ஒன்றிய திமுக செயலாளா் ஞானவேலன் மூலம் வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோரிடம் மனு அளித்தனா். பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, கீழ்பள்ளிப்பட்டு புதுமனை பகுதியில் 320 குடும்ப அட்டைதாரா்களுக்கான பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு ஆணை வெளியிட்டது. இதையடுத்து, கீழ்பள்ளிப்பட்டு புதுமனை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பகுதி நேர நியாய விலை கடை அமைய கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட எம்.பி. கதிா்ஆனந்த், எம்எம்ஏ-க்கள் தேவராஜி, வில்வநாதன், ஒன்றிய திமுக செயலாளா் ஞானவேலன் மற்றும் ஒன்றிய ஓட்டுநரணி செயலாளா் செல்வராஜி மற்றும் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமை பொதுக்குழு உறுப்பினா் பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஞானசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

