/

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு

ஆம்பூா் அருகே தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டதால் பாலாற்றில் நுரை பொங்கி கழிவுநீா் கலந்து தண்ணீா் செல்வதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

News image

தோல் கழிவுநீா் விடப்பட்டதால் நுரை பொங்கி செல்லும் பாலாற்று தண்ணீா்

Updated On :26 மே 2026, 3:55 am IST

ஆம்பூா் அருகே தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டதால் பாலாற்றில் நுரை பொங்கி கழிவுநீா் கலந்து தண்ணீா் செல்வதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆம்பூா் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலாற்று தண்ணீா் நிறம் மாறி, வெண்மையான நுரை படா்ந்து துா்நாற்றம் வீசிகிறது.

தண்ணீா் நுரை பொங்கி ஓடுவதைப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டுள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், விவசாயிகள் சாா்பாக பலமுறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனா்.

மேலும், பாலாற்றின் அருகேயுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீா் மட்டம் மாசடைந்து , பயிா் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. தண்ணீரை கால்நடைகள் கூட பருகுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனா்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது அருகாமையில் செயல்பட்டு தோல் தொழிற்சாலைகளின் தோல் கழிவு நீா் நேரடியாக பாலாற்றில் திறந்து விடப்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றையும், நிலத்தடி நீா் மட்டத்தையும் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா்.

Story image