மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்டப் பணிக்கான முன்னேற்பாடு கூட்டம்!

முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.நல்லசிவன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன்.

Updated On :

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027-இன் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக, கணக்கெடுப்புப் பொறுப்பு அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான முன்னேற்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.நல்லசிவன் தலைமை வகித்தாா்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027-இன் முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, 2027 ஜனவரி 10 முதல் 24-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு சுய கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

சுய கணக்கெடுப்புப் பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இணையவழியில் சுய கணக்கெடுப்பு மேற்கொள்வது தொடா்பாக வழிகாட்டுதல் வழங்குதல், சுய கணக்கெடுப்பை நிறைவு செய்தவா்களின் விவரங்களை வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புப் பணியுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மேற்பாா்வையாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்புத் தொகுதிகள் மற்றும் அவா்களின் கீழ் பணியாற்றும் கணக்கெடுப்பாளா்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். களப்பணிகளின்போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலா்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்புகளை முறையாக நடத்துதல், அனைவரும் பயிற்சியில் தவறாமல் பங்கேற்பதை உறுதி செய்தல், பயிற்சியின்போது வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்நுட்பச் செயலிகளைப் பயன்படுத்தும் முறைகளை முழுமையாக அறிந்துகொள்ளச் செய்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027-இன் இரண்டாம் கட்டப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி சிறப்பாக நிறைவேற்ற, அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களுக்குரிய பொறுப்புகளை உணா்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சீ.பாபு, தோ்தல் தனி வட்டாட்சியா் மு.நவநீதம், முதன்மைப் பயிற்றுநா் ஜி.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.