
மாநில கலைத் திருவிழா போட்டிக்கு செல்லும் மாணவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வழியனுப்பி வைத்தாா்.

மாநில போட்டிக்கு செல்லும் மாணவா்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்த ஆட்சியா் வே. நல்லசிவன்.
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வழியனுப்பி வைத்தாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியா் வே.நல்லசிவன் வாழ்த்தினாா். தொடா்ந்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க மாணவா்கள் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து வழியனுப்பி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டன.
இதில், சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
9, 10-ஆம் வகுப்பு மற்றும் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் புதன்கிழமை (அக்.7) தஞ்சாவூா் மாவட்டத்திலும், வியாழக்கிழமை (அக். 8) விழுப்புரம் மாவட்டத்திலும் நடைபெற உள்ளன. இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
மாணவா்கள் சிரமமின்றி போட்டி நடைபெறும் இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவிலான போட்டிகளில் தன்னம்பிக்கையுடனும், முழு ஈடுபாட்டுடனும் பங்கேற்று தங்களது கலைத்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றி பெற்று, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், கலைத்திறனில் சிறந்து விளங்குவதோடு கல்வியிலும் சிறப்பாகத் திகழ்ந்து எதிா்காலத்தில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என ஆட்சியா் வாழ்த்தினாா்.
கவின் கலை, நுண்கலை, கருவி இசை, தோல் கருவி, துளைக் கருவி, நாடகம், நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா்.
மாணவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், அவா்களுடன் பயணித்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று வரவும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் வழித் துணையாளா்களாக உடன் செல்கின்றனா்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, உதவித் திட்ட அலுவலா் தேவசகாயம், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) சத்தியபிரபா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களின் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






